சண்டிகர்: பாகிஸ்தான் ஆதரவில் செயல்பட்டு வந்த போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் கும்பல் ஒன்றை பஞ்சாப் போலீஸ் கண்டறிந்து கைதுசெய்துள்ளது. இந்திய எல்லைப் பாதுகாப்பு படை வீரர் ஒருவரும் இந்தக் குழுவில் அடக்கம் என்பதுதான் இதில் அதிர்ச்சிகரமாக தகவல்.
சுமித் குமார் என்ற பெயருடைய அந்த எல்லைப் பாதுகாப்புப் படை கான்ஸ்டபிளிடமிருந்து, துருக்கியில் தயார் செய்யப்பட்ட 9எம்எம் ஸிகானா பிஸ்டல், பாகிஸ்தான் ஆயுத தொழிற்சாலையின் முத்திரைப் பதிக்கப்பட்ட 80 லைவ் கேட்ரிட்ஜ்கள், 12-போர் கன், இரண்டு பத்திரிகைகள் மற்றும் ரூ.32.30 லட்சம் பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
இந்த எல்லைப் பாதுகாப்புப் படை கான்ஸ்டபிள், அந்த கும்பலில் முக்கியப் பங்கு வகிப்பவர் என்று கூறப்படுகிறது.
பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் மாவட்ட காவல்துறை, திர்பூர் என்ற கிராமத்தில், அமன்பிரீத் சிங் என்பவரை ஒரு கொலை வழக்கில் கைது செய்தது. பின்னர், அவரிடம் நடைபெற்ற விசாரணையில், அவரும், அவருடைய சகோதரர்களும், சர்வதேச எல்லையில் ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தலை மேற்கொள்ளும் பாகிஸ்தானின் குழுவுடன் தொடர்பு இருப்பதை ஒப்புக்கொண்டார்.
இந்தத் தொடர்புக்கு, சுமித் குமார் என்ற அந்த கான்ஸ்டபிள் உதவியுள்ளதையும் அவர் கூறினார். கடத்தல் கும்பலுடன் தனக்கு இருந்த தொடர்பை, அந்த கான்ஸ்டபிள் ஒப்புக்கொண்டார் என்று கூறப்படுகிறது.