பாக் மற்றும் வங்க தேச எல்லையில் பாதுகாப்பு தீவிரம் : இந்தியா நடவடிக்கை
இந்தூர்
பாகிஸ்தான் மற்றும் வங்க தேச எல்லைகளில் இந்தியா தனது பாதுகாப்பை தீவிரப்படுத்த உள்ளதாக எல்லை பாதுகாப்பு படை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் மாநிலத்தில் இந்தியாவுக்குள் ஊடுருவ பாகிஸ்தான் தீவிரவாதிகள் முயன்று வருகின்றனர். இதனால் இந்திய ராணுவத்தினருக்கும் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கும் இடையில் தினமும் போர் மூண்டு வருகிறது. வங்க தேச எல்லையிலும் இதே போன்ற நிகழ்வுகள் நடப்பது தொடர்ந்து வருகிறது. இந்த இரு நாட்டின் எல்லைப் பகுதிகளும் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு பிரச்னையாக உள்ளன.
இந்நிலையில் இந்தூரில் இந்திய எல்லைப் பாதுகாப்பு படை இயக்குனர் கே கே ஷர்மா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “இந்திய எல்லை பாதுகாப்புப் படை பாகிஸ்தான் மற்றும் வங்கதேச எல்லைகளில் சுமார் 2000 கிமீ தூரப் பகுதியில் ஊடுருவல் அச்சுறுத்தல் உள்ளதாக கண்டறிந்துள்ளது. இந்தப் பகுதிகளில் பாதுகாப்புப் பணியை தீவிரப்படுத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.
இந்த பாதுகாப்புப் பணியில் நவீன தொழில்நுட்பத்தை உபயோகப்படுத்த எண்ணி உள்ளோம். இந்த தொழில் நுட்பம் மூலம் எத்தகைய பருவநிலையிலும் ஊடுருவ முயல்பவர்களைப் பற்றி உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இயலும். இதற்கான மாதிரி ஒன்றை ஜம்மு பகுதியில் பொருத்தியதில் அது வெற்றி அடைந்துள்ளது. அதனால் அதே முறையை எல்லைப் பகுதி எங்கும் விரிவு படுத்த உள்ளோம்.” என தெரிவித்துள்ளார்.