தீராத நிதி நெருக்கடி – சொந்தக் கட்டடங்களை வாடகைக்கு விடும் பிஎஸ்என்எல்!

சென்னை: நிதி நெருக்கடியை சமாளிக்க, பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு சொந்தமான கட்டடங்கள் வாடகைக்கு விடப்பட்டு வருகின்றன.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; நஷ்டத்திலிருந்து விடுபடும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்திருந்தது பிஎஸ்என்எல் நிர்வாகம். இதன்படி, ஒரேநாளில் 78500 ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெற்றனர்.

இதன்மூலம் ஊழியர்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்ததால், பல பிஎஸ்என்எல் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இந்நிறுவனத்தில் மொத்தமாக 1.76 லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலான பிஎஸ்என்எல் கட்டடங்கள் சொந்தக் கட்டடத்தில் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, நிதி நெருக்கடியை சமாளிக்க வேண்டி, அவற்றில் பலவற்றை வாடகைக்கு விடும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது பிஎஸ்என்எல் நிர்வாகம்.

இதன்படி, பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு சொந்தமான கட்டடங்களில் உள்ள பல தளங்கள், பல்வேறு அரசுத் துறைகளின் அலுவலகப் பயன்பாடுகளுக்காக வாடகைக்கு விடப்படுகின்றன.