டில்லி

பி எஸ் என் எல் ஊழியர்களுக்கு சென்ற மாத ஊதியம் இன்று அளிக்கப்படும் என நிர்வாக இயக்குனர் அனுபம் ஸ்ரீவத்சா தெரிவித்துள்ளார்.

அரசு தொலை தொடர்பு நிறுவனமான பி எஸ் என் எல் கடுமையான நிதி பற்றாக்குறையில் உள்ளது.   இதனால் ஊழியர்களுக்கு சென்ற மாத ஊதியம் இதுவரை வழங்கப்படாமல் உள்ளது.   வழக்கமாக மாதத்தின் இறுதி வேலை நாளில் வழங்கப்படும் ஊதியம் மாதம் முடிந்து சுமார் 15 நாட்களாகியும் வழங்கப்படவில்லை.

இன்று பி எஸ் என் எல் தலைவரும் நிர்வாக இயக்குனருமான அனுபம் ஸ்ரீவத்சா, “தற்போது பி எஸ் என் எல் நிறுவனத்துக்கு பல புதிய இணைப்பு வாய்ப்புக்கள் கிடைத்துள்ளன.  மார்ச் மாதம் என்பது பி எஸ் என் எல் லுக்கு வருவாய் அதிகரிக்கும் மாதம் ஆகும்.  மார்ச் மாதம் சுமார் ரூ.2700 கோடி வரை வருமானம் வர வாய்ப்புள்ளது.

அந்த வருமானத்தில் இருந்து ரூ. 850 கோடியை எடுத்து ஊழியர்களுக்கு தர வேண்டிய பிப்ரவரி மாத ஊதியத்தை வெள்ளிக்கிழமை (இன்று) வழஙக உள்ளோம்.   புதிய இணைப்பு அளிப்பதில் இப்போது ரிலையன்ஸ் ஜியோ வுக்கு அடுத்த நிலையில் பி எஸ் என் எல் உள்ளது.  எனவே இந்த வருமானம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

எங்களுக்கு தொலை தொடர்பு அமைச்சர் மூலதன செலவுகளுக்கு நிதி அளிக்க ஒப்புதல் அளித்துள்ளார்.   இதனால் வருமானத்தை ஊதியத்துக்கு செலவிட முடிகிறது.   நாங்கள் அமைச்சருக்கும் எங்களுக்கு இந்த நிலையில் ஒத்துழைப்பை அளிக்கும் எங்கள் ஊழியர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என அறிவித்துள்ளார்

பி எஸ் என் எல் நிறுவனம் பி எஸ் என் எல் மற்றும் எம் டி என் எல் என்னும் பெயரில் இயங்கி வருகிறது.  இதில் பி எஸ் என் எல் பிரிவில் சுமார் 1.76 லட்சம் பேரும் எம் டி என் எல் பிரிவில் 22000 பேரும் பணி புரிந்து வருகின்றனர்.