டெல்லி:

பிஎஸ்என்எல், எம்டிஎன்எல்-லில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு, ஒப்பந்ததாரர்களே ஊதியம் வழங்க வேண்டும் என்று, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்து உள்ளார். அது அவர்களின் கடமை என்றும் கூறி உள்ளார்.

பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்கள் கடன்சுமையால் தத்தளித்து வருகிறது. இதனால், அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாமல் இழுத்தடிக் கப்பட்டு வருகிறது. இதையடுத்து, நிறுவனத்தின் சொத்துக்களை விற்பனை செய்ய முன்வந்துள்ள மத்தியஅரசு, 50வயதுக்கு மேற்பட்ட நிரந்தர ஊழியர்களுக்கு விஆர்எஸ் அறிவித்து உள்ளது.

அதே வேளையில் அங்கு பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியர்களின் நிலைமை கேள்விக்குறியாகி உள்ளது. நாடு முழுவதும் பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்களில் சுமார் 30 சதவிகிதத்திற்கும் அதிகமான ஒப்பந்த ஊழியர்கள் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு மத்திய அரசு எந்தவித உதவியும் செய்ய மறுத்து வருகிறது.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டோலா சென் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதில் அளித்து பேசிய   பேசிய மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர், பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் ஆகிய இரண்டு இழப்பு நிறைந்த பொதுத்துறை நிறுவனங்களை புதுப்பிக்க அரசாங்கம் தற்போது செயல்பட்டு வருகிறது என்றும், பிஎஸ்என் எல்லின் பணியாளர் செலவு வருவாயில் 75.06% ஆகவும், எம்டிஎன்எல் விஷயத்தில் இது 87.05% ஆகவும் உள்ளது என்று தெரிவித்து உள்ளர்.

மேலும், இதுவரை 79ஆயிரம் பணியாளர்கள் விருப்ப ஓய்வுக்கு மனு செய்திருப்பதாகவும்,  தெரிவித்துள்ள அமைச்சர்,  பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல் ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது, அவர்களை பணியில் அமர்த்திய ஒப்பந்தக்காரர்களின் கடமை என்று தெரிவித்து உள்ளார்.

ஒப்பந்த ஊழியர்கள், ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக மட்டுமே வேலை செய்கிறார்கள், அவர்கள் புதுப்பித்தலுக்கு உட்பட்டவர்கள். எங்களுக்கு அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை, ஒப்பந்த ஊழியர்கள் தங்களது ஒப்பந்தக்காரர்களின் பட்டியலில் இருப்பதால் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய  நிலுவைத் தொகையை செலுத்த வேண்டியது, ஒப்பந்ததாரர்கள்தான் என்று தெரிவித்து உள்ளார்.