பி எஸ் என் எல் இணைய சேவை ரூ.4300 கோடி செலவில் விரிவாக்கம்

டில்லி

ரும் 2018-19 ஆம் வருடம் பி எஸ் என் எல் இணைய சேவை ரூ.4300 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

அரசின் தொலை தொடர்பு நிறுவனமான பி எஸ் என் எல் கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி வரை 9.4% வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.   ஜனவரி மாதத்தில் மட்டும் சுமார் 3.96 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.    மற்ற தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களுடன் போட்டியிடும் வகையில் இந்நிறுவனமும் பல சேவைகளை அளிக்க உள்ளது.

பி எஸ் என் எல் நிறுவன தலைவர் அனுபம் ஸ்ரீவத்சவா, “பி எஸ் என் எல் தனது இணைய சேவையை விரிவாக்கம் செய்ய  உள்ளது.   இதற்காக இந்த 2018-19 நிதி ஆண்டில் ரூ.4300 கோடி செலவில் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.  மேலும் ரூ,5000 லிருந்து ரூ.6000 கோடி விரிவாக்கத்துக்காக செலவிடப்பட உள்ளது.   விரைவில்  லட்சத்தீவு மற்றும் அருணாசலப் பிரதேசத்தில் அலைவரிசைகள் அதிகரிக்கப்பட உள்ளன.

அத்துடன் தனியார் சேவைகள் இல்லாத இடங்களிலும் பி எஸ் என் எல் சேவைகளை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.    மேலும் 3 ஜி அலைக்கற்றைக்காக 12000 சேவை கோபுரங்களையும் 4 ஜி அலைக்கற்றைக்காக 10000 சேவை கோபுரங்களையும் அமைக்க உள்ளது.” எனத் தெரிவித்தார்.

இதன் மூலம் பி எஸ் என் எல் 4ஜி அலைக்கற்றை சேவைகளை தொடங்கும் என்பது உறுதியாக்கப்பட்டுள்ளது.