பலாத்கார குற்றம் சாட்டப்பட்ட பகுஜன் சமாஜ் எம் பி வாரணாசியில் சரண்

வாரணாசி

லாத்கார குற்றம் சாட்டப்பட்டுள்ள பகுஜன் சமாஜ் கட்சி மக்களவை உறுப்பினர் அதுல் ராய் வாரணாசி நீதிமன்றத்தில் இன்று சரண் அடைந்தார்.

வாரணாசி நகரில் உள்ள சிதாய்பூர் பகுதியில் வசிப்பவர் அதுல் ராய். இவர் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் உ பி மாநிலம் கோசி தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு தன்னை எதிர்த்த பாஜகவின் ஹரிநாரயண் ராஜ்பர் என்பவரை தோற்கடித்துள்ளார். மக்களவை தேர்தலில் அவர் வேட்பு மனு அளித்த ஒரு வாரத்தில் அவர் மீது பாலியா என்னும் ஊரில் உள்ள ஒரு பெண் பலாத்கார புகார் அளித்தார்.

அந்த புகாரில் ராய் தன்னை சிதாய்பூரில் உள்ள அவரது வீட்டுக்கு கடந்த 2018 ஆம் வருடம் மார்ச் மாதம் அவர் மனைவியை அறிமுகம் செய்து வைப்பதாக கூறி அழைத்துச் சென்றதாகவும் அங்கு தன்னை பலாத்காரம் செய்ததாகவும் கூறி இருந்தார். அத்துடன் இந்த பலாத்காரத்தை வீடியோ படம் எடுத்து அதைக் காட்டி மிரட்டி தம்மை மேலும் பல முறை பலாத்காரம் செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணையில் ராய் ஆஜர் ஆகாததால் கடந்த மே மாதம் 20 ஆம் தேதி அவரை தலைமறைவாக உள்ளவர் என நீதிமன்றம் அறிவித்தது. இந்த மாதம் 13 ஆம் தேதி இந்த உத்தரவு அவரது வாரணாசி மற்றும் பிர்புர் இல்லங்களில் ஒட்டப்பட்டுள்ளது. இந்த மாதம் 16 ஆம் தேதி மக்களவை உறுப்பினராக பதவி ஏற்க ராய் வரும் போது கைது செய்ய டில்லி காவல்துறையிடம் உ பி காவல்துறை உதவி கோரி இருந்தது.

இந்நிலையில் கடந்த 12 ஆம் தேதி அன்று புகார் அளித்த அந்தப் பெண்ணுக்கும் அவர் குடும்பத்துக்கும் குண்டர்கள் கொலை மிரட்டல் விடுத்து வருவதாக அந்த பெண் நீதிமன்றத்தில் தெரிவித்தார். அதை ஒட்டி அவரை காவல்துறை தீவிரமாக தேடி வந்தது. இன்று காலை வாரணாசி நீதிமன்றத்தில் நீதிபதி அசுதோஷ் திவாரி முன்பு அதுல் ராய் சரண் அடைந்துளார். அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி அளித்த உத்தரவின்படி அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.