கர்நாடகாவில் நடைபெற உள்ள 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காத அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்தும் பணியில், அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா ஈடுபட்டுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் வரும் டிசம்பர் 5ம் தேதி 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. பாஜகவின் முக்கியஸ்தர்கள் பலரும் சீட் எதிர்பார்த்த நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில் பலருக்கும் சீட் வழங்கியது முக்கியஸ்தர்களிடம் அக்கட்சி மீது அதிருப்தியை உண்டாக்கியுள்ளது. இடைத்தேர்தலில் குறைந்தபட்சம் 8 தொகுதிகளில் வென்றாகவேண்டிய கட்டாயத்தில் பாஜக ஏற்கனவே இருப்பதால், வெற்றி வியூகம் அமைத்து தேர்தலில் அக்கட்சியினர் களமிறங்கியுள்ளனர்.

அதேநேரம் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்த பாஜகவினர் தங்களது வேட்பாளர்களுக்கு போட்டியாக சுயேட்சையாக களமிறங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதால், பலரையும் சமாதானப்படுத்தும் பணியில் அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா ஈடுபட்டுள்ளார். ஒசக்கோட்டை தொகுதியில் பாஜகவை சேர்ந்த பச்சேகவுடா எம்.பியின் மகன் சரத் பச்சேகவுடா சுயேட்சையாக களமிறங்கியுள்ளார். இவருக்கு மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் தங்களின் ஆதரவை எச்.டி குமாரசாமி அளித்துள்ளார். இதுபோல பலருக்கும் எதிர்கட்சிகள் ஆதரவு அளித்து, தங்களின் வெற்றி வாய்ப்பை பறிக்க கூடும் என்பதால், அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்த நடவடிக்கை மேற்கொள்வது குறித்து மத்திய அமைச்சர் சதானந்தகவுடாவுடன் தொடர்ந்து எடியூரப்பா ஆலோசித்து வருகிறார்.

சில தொகுதியில் உள்ள அதிருப்தியாளர்களுடன் தொலைபேசியில் தொடர்புக்கொண்டு பேசிய எடியூரப்பா, யஸ்வந்தபுரம், கே.ஆர் புரம் தொகுதிககளுக்ளில் உள்ள பாஜ அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்தும் பணியை மத்திய அமைச்சர் சதானந்தகவுடா, துணை முதல்வர் அஸ்வத்நாராயாணா மற்றும் அமைச்சர் அசோக் ஆகியோர் மூலம் மேற்கொண்டுள்ளார்.