டெல்லி:

முந்தைய காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ஆதார், நூறு நாள் வேலை திட்டம், நேரடி அன்னிய முதலீடு ஆகியவற்றை எதிர்த்து விமர்சனம் செய்த பாஜ, தற்போதைய பட்ஜெட்டில் இந்த திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்துள்ளது.


நாடாளுமன்றத்தில் 2017-18ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி தாக்கல் செய்து பேசுகையில்,‘‘ மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் இது வரை இல்லாத அளவுக்கு ரூ. 37 ஆயிரம் கோடியில் இருந்து ரூ. 48 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பணியாற்றும் பெண்களின் எண்ணிக்கை 55 சதவீதம் அதிகரித்துள்ளது’’ என்றார்.
தற்போது இந்த திட்டத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் பாஜ, கடந்த 3 ஆண்டுகளுக்கு இந்த திட்டத்தை காங்கிரஸ் கட்சி அறிமுகம் செய்தபோது எதிர்ப்பு தெரிவித்தது.
கிராமப் புற பகுதிகளை கட்டமைக்கும் நோக்கத்துடன் 100 நாட்கள் வேலையை உறுதி அளிக்கும் வகையில் 2016ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட இந்த திட்டத்தை விமர்சனம் செய்து பாஜ கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பிரச்சாரம் செய்தது.
இந்த திட்டத்தை கொண்டு வந்ததன் மூலம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் தோல்வியை இது காட்டுகிறது என்றும் பாஜ கூறியது.

மேலும், 2014ம் ஆண்டில் பிரதமரான பிறகு நாடாளுமன்றத்தில் மோடி பேசுகையில், சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளில் மக்களை பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபடுத்தியது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் தோல்வி. இதை மாற்றுவேன் என்றார். ஆனால், இப்போது பாஜ இந்த திட்டத்தில் தனது நிலைப்பாட்டை தலைகீழாக மாற்றியுள்ளது. தோல்வி திட்டத்துக்கு எதற்காக இப்போது அதிக நிதி ஒதுக்கியுள்ளது.

அதேபோல் ஆதார் கார்டு திட்டத்தையும் பாஜ கடுமையாக விமர்சனம் செய்தது. இதனால் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கிறது. ஆதார் ஒரு ஃப்ராடு. இதில் அரசியல் நோக்கம் தவிர வேறு எந்தவித நோக்கமும் கியைடாது. மக்களின் தனிப்பட்ட தகவல்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் என்று பாஜ விமர்சனம் செய்தது.

ஆனால், தற்போது பட்ஜெட்டில் வங்கி கணக்குகளுடன் ஆதார் இணைக்க வேணடும். மூத்த குடிமக்களுக்கான சுகாதார அட்டையுடன் ஆதார் இணைக்கப்படும் என்று அறிவிப்புகளை அருண்ஜேட்லி அறிவித்துள்ளார். ஆதார் கார்டின் யுஐடிஏஐ திட்டத்திற்காக நந்தன் நிலேகனிக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

பணமதிப்பிழப்பு அறிவிப்பு வெளியான பிறகு வங்கி கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்க சொல்லி மத்திய அரசு வற்புறுத்தியது. இதன் பின்னர் ஆதார் அட்டை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக கூறி ஆதாயம் தேடிக் கொள்கிறது பாஜ.

அடுத்து, அன்னிய நேரடி முதலீடு திட்டத்தை கொண்டு வந்ததற்காக ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை பாஜ விமர்சனம் செய்தது. ஆனால், தற்போது அனைத்து துறைகளிலும் இந்த திட்டத்தை பாஜ அமல்படுத்துகிறது. மன்மோகன் சிங் அரசு கொண்டு வந்த திட்டத்தின் பயன்களை மோடி அனுபவிக்கிறார் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.