டெல்லி:

க்களவையில், விதிகளுக்கு முரணாக செயல்பட்ட குற்றத்துக்காக தமிழகத்தைச் சேர்ந்த மாணிக் தாகூர் உள்பட 7 காங்கிரஸ் எம்.பி.க்களை சபாநாயகர் ஓம் பிர்லா சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டு உள்ளார். இதன் காரணமாக, இந்த 7 எம்.பி.க்களும் நடப்பு கூட்டத்தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தொடங்கியதில் இருந்தே, டெல்லி வன்முறை குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சபை நடவடிக்கைகள் தடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சபையில் அமளில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் சபாநாயகர் நாற்காலியின் பின்புறத்திலிருந்த காகிதத்தை வலுக்கட்டாயமாக அகற்றி எறிந்தனர். இது கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பாராளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக அவைத்தலைவரின் பெஞ்சுகளில் இருந்து ஆவணங்கள் பறிக்கப்பட்டது துரதிர்ஷ்டவசமானது என்று சபாநாயகர் ஓம்பிர்லா கடும் கோபம் அடைந்து, எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் விருதுநகர் தொகுதி எம்.பி.யான  மாணிக்கம் தாகூர், கவுரவ் கோகோய், டி.என்.பிரதாபன், டீன் குரியகோஸ், ராஜ்மோகன் உன்னிதன், பென்னி பெஹனன்,  குர்ஜித் சிங் ஆஜ்லா ஆகிய 7 பேரை இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுஉள்ளார்.  பாராளுமன்ற நடத்தை விதி 374 இன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.