கரடியிடம் இருந்து  சிறுவனை மீட்ட  எருமைகள்..

சின்னப்பத்தேவர் மற்றும் ராம.நாராயணன் படங்களில் வருவது போல் மத்தியபிரதேச மாநிலத்தில் ஒரு திகில் சம்பவம் அரங்கேறியுள்ளது.

அங்குள்ள பீதல் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிக்கு தீபக் என்ற 15 வயது சிறுவன் புல் அறுப்பதற்காக சென்றிருந்தான். நடுக்காட்டில், அவன் புல் அறுத்துக்கொண்டிருந்தபோது, குட்டியுடன் கரடி ஒன்று அங்கு வந்துள்ளது.

அந்த சிறுவன் கையில் ஆயுதத்துடன் இருந்ததால், தன் குட்டிக்கு ஆபத்து ஏற்படுமோ என நினைத்த கரடி, அந்த சிறுவன் மீது பாய்ந்தது.

அவன் அலறிய படி ஓட்டம் பிடித்தான். அப்போது அந்த அதிசயம் நிகழ்ந்தது.

அங்கு புல் மேய்ந்து கொண்டிருந்த எருமைக்கூட்டம்,, சிறுவனை காப்பாற்றும் வகையில் கரடியை விரட்டின.
10 க்கும் மேற்பட்ட எருமைகள் அந்த கூட்டத்தில் இருந்ததால், குட்டியுடன் கரடி தப்பி ஓடிவிட்டது.

தீபக்குடன் வனப்பகுதிக்கு சென்ற மற்றொரு சிறுவன், கிராமத்துக்குள் ஓடி வந்து நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளான்.

தீபக்கின் தந்தை மற்றும் உறவினர்கள் காட்டுக்கு விரைந்து சென்று தீபக்கை மீட்டு, அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

கரடி தாக்கியதால் அவன் உடலில் சிறு சிராய்ப்புகள் உள்ளன, அவனது உடல் நிலை சீராக உள்ளது.