மும்பையில் இடிந்து விழுந்த கட்டடம் – பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு?

--

மும்பை: தெற்கு மும்பையில் ஜன நெருக்கடி மிகுந்த டோங்ரி பகுதியில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்த ஒரு கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் 14 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; டோங்ரி பகுதியில் இடிந்து விழுந்த கட்டடத்தால், இடிபாடுகளில் சிக்கி மொத்தம் 14 பேர் இறந்துள்ளதாகவும், இன்னும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

இதுவரை மொத்தம் 9 நபர்கள் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப் படையின் 3 அணிகள் தொடர்ச்சியாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த கட்டட இடிபாடு ‘நிலை – 2’ என்று தேசிய பேரிடர் மீட்பு படையால் மதிப்பிடப்படுகிறது. மிகப்பெரிய சேதம் ஏற்பட்டிருந்தால்தான் ‘நிலை – 1’ என்று மதிப்பிடப்படும் என்பதாக கூறப்படுகிறது. வங்கதேச தலைநகரம் டாக்காவிற்கு அடுத்து அதிக மக்கள் நெருக்கம் மிகுந்த நகரமாக இருக்கிறது மும்பை.

“விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ரூ.50000 மும் வழங்கப்படும். காயமடைந்தோருக்கான மருத்துவ செலவு முழுவதையும் அரசே ஏற்றுக்கொள்ளும்” என்று தெரிவித்துள்ளார் மராட்டிய மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ்.

You may have missed