‘புல்புல்’ புயலால் தமிழகத்துக்கு பாதிப்பில்லை! வானிலை மையம் தகவல்

‘சென்னை:

ங்கக்கடலில் புதிதாக புயல் உருவாகி உள்ள புதிய புயலுக்கு புல்புல் என பெயரிடப்பட்டுள்ள நிலையில், இந்த புயல் காரணமாக தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை என்று வானிலை மையம் தெரிவித்து உள்ளது. மேலும்,  அந்தமான் கடல்பகுதிக்குமீனவர்கள் யாரும் செல்லவேண்டாம் எனவும் அறிவுறுத்தி உள்ளது.

அந்தமானில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வருவதாகவும், இன்று புயலாக மாறும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்திருந்தது. அதன்படி, தற்போது, அந்த  காற்றழுத்த தாழ்வு மண்டலம்  வலுப்பெற்று புயலாக மாறி உள்ளதாகவும், அதற்கு புல்புல் என்று பெயரிடப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.

இந்த புயல்  ஒடிசாவை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ள வானிலை மையம், இதனால் தமிழகத்துக்கு பாதிப்பு இல்லை என்றாலும் அடுத்து 24 மணி நேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யக்கூடும் என்றும் கூறி உள்ளது.

தென்மாவட்டங்களைப் பொருத்தவரை கனமழை பெய்ய வாய்ப்புண்டு. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இந்த புதிய புயலால் நாளைவரை மத்திய தென் கிழக்கு வங்கக்கடல், வடக்கு ஆந்திரக்கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீசும் என கூறப்படுகிறது.

இதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் கன்னியாகுமரியில் உருவான மகா புயல் குஜராத்தில் கரையக் கடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.