பசுமாட்டைப் பிரிய மனமில்லை.. கோவில் காளை நடத்திய போராட்டம் 

பசுமாட்டைப் பிரிய மனமில்லை.. கோவில் காளை நடத்திய போராட்டம்

மாதிரி புகைப்படம்

மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவர், தனது வீட்டில் பசுமாடு ஒன்றை வளர்த்து வந்துள்ளார்.  அதே பகுதியில் உள்ள மஞ்சிலைக் கோவில் காளை ஒன்று அடிக்கடி முனியாண்டி வீட்டில் உள்ள பசுமாட்டைக் காண அங்கு வருவதும், அதனோடு சேர்ந்து உணவு சாப்பிடுவதும், தண்ணீர் குடிப்பதுமாக இருந்துள்ளது.  கோவில் காளை என்பதால், முனியாண்டியும் அந்தக் காளையைத் தடுக்கவில்லை.

தொடர் ஊரடங்கு காரணமாக, வருமானம் இல்லாமல் தவித்த முனியாண்டி, தனது பசுமாட்டை விற்க முடிவெடுத்துள்ளார். அதன்படி, வாடிப்பட்டியைச் சேர்ந்த நபருக்கு மாட்டை விலைபேசி விற்றுள்ளார். பின்னர், சரக்கு வண்டியில், மாட்டினை ஏற்றி வாடிப்பட்டிக்கு அனுப்பத் தயார் செய்துள்ளார் முனியாண்டி.

வழக்கம் போலப் பசுமாட்டைக் காணக் கோவில் காளை அங்கு வந்துள்ளது.  பசுமாடு வண்டியில் ஏற்றப்பட்டதைக் கண்டு வண்டி அருகே வந்துள்ளது. அனைவரும் அதனைச் சாதாரணமாக நினைத்திருந்த நேரத்தில், வண்டியை எடுக்கவிடாமல், வண்டி முன்னால் வந்து நின்று தடுத்துள்ளது.

மேலும் டிரைவரையும் முட்ட முயன்றுள்ளது. தொடர்ந்து வண்டியைச் சுற்றிச்சுற்றி வந்த காளையால் சுமார் ஒரு மணிநேரம் வரை வண்டியை நகர்த்தக்கூட முடியாமல் தவித்துள்ளனர் டிரைவரும் முனியாண்டியும்.  ஒருவழியாகச் சாமார்த்தியமாக வண்டியை எடுத்துள்ளார் டிரைவர்.  அப்போதும் பசுமாட்டைப் பிரிய மனம் இல்லாமல் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை வண்டியின் பின்னால் ஓடி வந்துள்ளது அந்தக் கோவில் காளை. ஒரு கட்டத்தில் தொடர்ந்து ஓட முடியாமல் மூச்சு வாங்கி நின்றுள்ளது.

பழகிய பசுமாட்டைப் பிரிய மனம் இல்லாமல் பாசப்போராட்டம் நடத்திய கோவில் காளையின் செயல் அப்பகுதி மக்களை வியப்பிலும் நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது.

– லெட்சுமி பிரியா

You may have missed