மும்பை:

தானேயில் உள்ள செந் நாரைகள் சரணாலயம் மற்றும் மும்பை சிறுத்தைகள் பூங்கா வழியே புல்லட் ரயில்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


அகமதாபாத்- மும்பை இடையில் புல்லட் ரயில் இயக்கப்படும் என்ற அறிவிப்பு வந்தது முதல் பொதுமக்கள் மத்தியில் ஆர்வமும் தொற்றிக் கொண்டது.

98 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த திட்டத்துக்கு நில ஆக்கிரமிப்பு செய்வதை எதிர்த்து மகாராஷ்டிராவில் உள்ள மலைக் கிராம மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த திட்டம் மும்பை அடுத்த தானேயில் உள்ள செந் நாரை சரணாலயம் மற்றும் மும்பையில் சிறுத்தைகள் அதிகம் இருக்கும் சஞ்சய் காந்தி தேசிய பூங்கா வழியே அமைப்பதற்கும் கடும் எதிர்ப்பு எழுந்தது.

தானே செந் நாரைகள் சரணாலயத்துக்கு கடந்த மாதம் 1.2 லட்சம் நாரைகள் வந்துள்ளன. இதனை ஒட்டிய சீவ்ரி பகுதியில் புல்லட் ரயில் பணி நடப்பதால், இவை பெரும் பாதிக்குப்புக்குள்ளாயின.
இதற்கும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், கடும் எதிர்ப்புகளை மீறி, மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தலைமையில் நடந்த கூட்டத்தில், இந்த பகுதியின் வழியே புல்லட் ரயில் இயக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

புல்லட் ரயில் திட்டம் தொடர்பாக பிரதமர் மோடியும் ஜப்பான் பிரதமர் சின்ஜோ ஏபும் கடந்த 2017-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்து கொண்டனர். இந்த புல்லட் ரயில் திட்டம் 2022-ல் நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.