இந்தியாவுக்கு புல்லட் ரெயில் தேவை இல்லை : முன்னாள் ரெயில்வே பொறியாளர்
டில்லி
இந்தியாவுக்கு பாதுகாப்பான ரெயில்கள் தான் தேவை புல்லட் ரெயில் அல்ல என முன்னாள் ரெயில்வே பொறியாளர் ஸ்ரீதரன் கூறி உள்ளார்.
ரெயில்வே துறையில் பணி புரிந்து ஓய்வு பெற்ற பொறியாளர் ஸ்ரீதரன். இவர் கொங்கண் ரெயில்வே மற்றும் டில்லி மெட்ரோ அமைப்பதில் பெரும் பங்களித்துள்ளார். அது மட்டும் இன்றி பெருநகரங்களில் உள்ள மெட்ரோ ரெயில் அமைப்புக்களில் இவர் ஆலோசகராக இருந்துள்ளார். இந்திய ரெயில்வேயில் பயோ டாய்லட் அமைப்பதை இவர் பெருமளவில் ஊக்குவித்துள்ளார்.
ஒரு நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் ஸ்ரீதரன். “நமது நாட்டு மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான ரெயில் வசதிகள் மட்டுமே தேவைப்படுகிறது. அவ்வகையில் அனைத்து நகரங்களிலும் மெட்ரோ ரெயில் அமைப்பது தேவையான ஒன்றாகும். நாட்டில் 13 மெட்ரோக்கள் தற்போது உபயோகத்தில் உள்ளது. அதில் டில்லி மெட்ரோவின் வளர்ச்சி மக்களுக்கு நல்ல உபயோகமாக உள்ளது.
அதே நேரத்தில் புல்லட் ரெயில் மேல்தட்டு மக்களுக்கானது. அது மிகவும் விலை உயர்ந்தது. சாதாரண மக்களுக்கு உகந்தது அல்ல. அதனால் நம் நாட்டப் பொறுத்தவரை புல்லட் ரெயில் தேவை இல்லாதது. அதை விட தற்போதுள்ள ரெயில்களை நவீனபடுத்துவதும், பாதுகாப்பை மேம்படுத்துவதும் முக்கியமானது” என தெரிவித்துள்ளார்.