“பாகிஸ்தானியரின் வித்தையைக் கற்றுள்ளார் ஜஸ்பிரிட் பும்ரா” – கணிக்கும் சோயிப் அக்தர்

லாகூர்: வேகப்பந்து வீச்சில், பாகிஸ்தானியர்கள் பின்பற்றிய கலையை நன்கு கற்றுக்கொண்டவராக தெரிகிறார் இந்தியாவின் ஜஸ்பிரிட் பும்ரா என்று புகழ்ந்துள்ளார் பாகிஸ்தானின் முன்னாள் வேகம் சோயிப் அக்தர்.

அவர் கூறியுள்ளதாவது, “டிராக்கில் உள்ள புற்களைப் பற்றி கவலைப்படாமல், காற்றின் வேகம் மற்றும் தன்மையைக் கணித்து பந்து வீசுவது பாகிஸ்தானியர்களின் கலையாக இருந்தது.

நான் உட்பட, வாசிம் அக்ரம் மற்றும் வக்கார் யூனுஸ் போன்றவர்கள் இக்கலையைப் பின்பற்றி வந்தோம். அதாவது, நாங்கள் காற்றுடன் சேர்ந்து விளையாடி வந்தோம். காற்று எந்த காரிடாரிலிருந்து வீசுகிறதோ, அந்த முனையிலிருந்து நான் ரிவர்ஸ் பெறலாம்.

வேகப்பந்து வீச்சின் நுட்பங்கள் மற்றும் காற்றியக்கவியல் அம்சங்களை நாங்கள் அறிந்திருந்தோம். ஒருநாளின் எந்த நேரத்தில் பந்து ஸ்விங் ஆகும் என்பது எங்களுக்கு தெரிந்திருந்தது.

தற்போது, இந்த வித்தைகளை நன்கு கற்றவராக பும்ரா திகழ்வதாக நினைக்கிறேன். பேட்ஸ்மென்களை வெறும் 5 விநாடிகளில் ஏமாற்றும் வித்தையை அவர் அறிந்து வைத்துள்ளார்” என்று கருத்து வெளியிட்டுள்ளார் சோயிப் அக்தர்.