பெங்களூரு

கடந்த வெள்ளிக்கிழமை பெங்களூருவில் நடந்த ஒரு வரலட்சுமி பூஜையில் கட்டு கட்டாய் ரூபாய் நோட்டுக்களை வைத்திருந்த புகைப்படம் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

தென் இந்தியா எங்கும் வரலட்சுமி பூஜை சென்ற வாரம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.  வரலட்சுமியின் முகத்தை கலசத்தில் வைத்து அந்த கலசத்துக்கு சாதாரண நகைகள், மற்றும் பூக்களினால் அலங்காரம் செய்வது வழக்கம்.   அந்தப் புகைப்படங்களை அனைவரும் தற்போது வலை தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அவ்வாறு வெளிவந்த புகைப்படங்களில் ஒன்றில் எக்கச்சக்கமான நகைகளால் அலங்காரம் செய்யப்பட்டும், கலசத்தை சுற்றி ரூபாய் நோட்டுக்கள் கட்டு கட்டாக அடுக்கப்பட்டும் காணப்பட்டது.  இந்த புகைப்படம் அனைவரையும் பரபரப்பில் உள்ளாக்கியது.   இது குறித்து விசாரித்ததில் அந்த பூஜை பெங்களூருவில் உள்ள சூரிய நாராயணன் என்னும் தொழில் அதிபர் என்பது தெரிய வந்துள்ளது.  அவர் கட்டுமான தொழில், ரியல் எஸ்டேட் போன்ற பல தொழில்களை செய்து வருகிறார்.

இந்த பூஜை பற்றி அவர் தெரிவித்ததாவது :

நான் வருடா வருடம் வரலட்சுமி பூஜையை சிறப்பாக நடத்தி வருகிறேன்.  ஒவ்வொரு வருடமும் இது போல நகைகளாலும் ரூபாய் நோட்டுக்களாலும் அம்மனை அலங்கரிப்பது வழக்கம் தான்.  நகைகள் ஒரு கிலோவுக்கு சற்று அதிகமாக வைத்திருந்தேன்.  பணம் ரூ,73 லட்சம் வைத்திருந்தேன்.  இவை எல்லாமே நான் சட்டப்படி சம்பாதித்தது.  வங்கியில் இருந்து இந்த பணத்தை அலங்காரம் செய்யவே எடுத்து வந்தேன்.  அதற்கும் ஆதாரம் உள்ளது.

வருடத்துக்கு நான் வருமான வரி சுமார் ரூ 83 லட்சம் செலுத்துகிறேன்.  இவ்வளவு செல்வத்தை எனக்கு கொடுத்த லட்சுமிக்கு நான் பூஜை செய்வது தவறே இல்லை.  என் வீட்டுக்கு பூஜைக்கு பலர் வந்தனர்.  அதில் யாரோ இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.  நான் வெளியிடவில்லை.   இதற்காக எந்த விசாரணைக்கும் நான் உட்படத் தயாராக உள்ளேன்” எனக் கூறி உள்ளார்.

இது குறித்து பெங்களூருவில் ஒரு காவல் நிலையத்தில் சூரிய நாராயணன் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல் ஒன்று தெரிவிக்கிறது.