கவுகாத்தி:

அசாம் பிரபல பாடகர் பூபன் ஹஜாரிகாவுக்கு மத்திய அரசு கொடுத்த நாட்டின் உயரிய விருதான பாரத் ரத்னா விருதை திருப்பித் தர அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.


குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் வலுத்து வருகிறது. அனைத்து எதிர்ப்புகளையும் மீறி, மக்களவையில் மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியது.

மாநிலங்களவையில் இன்னும் நிறைவேற்றவில்லை. இந்நிலையில், வடகிழக்கு மாநிலங்களுக்கு சுற்றுப் பயணம் செய்த மோடிக்கு மாணவர்கள் கருப்புக் கொடி காட்டினர்.

இந்த சூழலில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பாடகர், கவிஞர், சினிமா தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட மறைந்த பூபன் ஹஜாரியாவுக்கு நாட்டின் உயர் விருதான பாரத் ரத்னா விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது.

இந்நிலையில், குடியுரிமைச் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பூபன் ஹஜாரியாவுக்கு தரப்பட்ட பாரத் ரத்னா விருதை, திருப்பிக் கொடுக்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.