புரெவி புயல் எச்சரிக்கை: நெல்லையில் தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர்…

நெல்லை: நிரெவி புயல் எச்சரிக்கை காரணமாக,  அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் நெல்லை சென்றுள்ளனர். அவர்கள், புயல் பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில் தயார் நிலையில் உள்ளனர்.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று  புயலாக மாறும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. புயல் காரணமாக தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறையினா் தடை விதித்துள்ளனா். ஏற்கனவே கடலுக்கு சென்ற மீனவர்களையும் தொடர்பு கொண்டு கரைக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர்.
ஒவ்வொரு மீனவ கிராமத்திலும் மீன்வளத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மீனவர்கள் தங்கள் படகுகளை பத்திரமாக கரையில் நிறுத்தி வைப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 4300 நாட்டுப்படகுகள், 423 விசைப்படகுகள் மற்றும் 8 கட்டுமரங்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.மேலும் வங்கக்கடலில் உருவாகி உள்ள புரெவி புயல் குறித்து தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு வரும் கப்பல்களுக்கு அறிவிக்கும் வகையில் ஆறாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

இந்த புயல் காரணமாக நெல்லை மாவட்டத்தில் அதீத கன மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் நெல்லை மாவட்டத்திற்கு  சென்னை அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர்   தேசிய பேரிடர் மீட்பு படை துணை கமாண்டர் வைத்திலிங்கம் தலைமையில் 60 பேர்  வந்துள்ளனர். இதைத் தொடர்ந்து துணை கமாண்டர் வைத்தியலிங்கம் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணுவுடன்  ஆலோசனை நடத்தினார். பின்னர் 60 பேரும் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு நெல்லை மாவட்டத்தில் உள்ள கடற்கரை பகுதி மற்றும் தாமிரபரணி ஆற்றுப் பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக தயார் நிலையில் உள்ளனர்.
இது குறித்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் துணை கமாண்டர் வைத்தியலிங்கம் கூறும்போது நெல்லை மாவட்டத்திற்கு 60 பேர் தேசிய பேரிடர் மீட்பு குழு வந்துள்ளதாகவும், 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு  தயார் நிலையில்  இருப்பதாகவும் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள இடங்களில்  இருந்து பொதுமக்களை மீட்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் அனைத்து கருவிகளும் தயார் நிலையில் இருப்பதாகவும்  தெரிவித்தார்.