விழுப்புரம் அருகில் நவீனா என்ற பெண்ணை ஒருதலையாக காதலித்தார் செந்தில் என்ற இளைஞர்,. இந்த நிலையில், நவீனாவின் வீட்டுக்குள் புகுந்து செந்தில்  தீக்குளித்தார். அப்போது நவீனாவையும்  அவர்  பிடித்துக் கொண்டதில், இருவரும் படுகாயமடைந்தனர். மருத்துவமனையில், சிகிச்சை பலனின்றி  செந்தில்  உயிரிழந்தார்; நவீனாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

செந்திலால் எரிக்கப்பட்ட நவீனா
செந்திலால் எரிக்கப்பட்ட நவீனா

இந்த செந்தில்தான் சில மாதங்களுக்கு முன், தான் ஒரு பெண்ணை காதலித்ததாகவும், அது பிடிக்காத பெண் வீட்டார் தனது கை மற்றும் காலை வெட்டிவிட்டார்கள் என்றும் காவல்துறையில் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். இது தொடர்பான புதிய தலைமுறை தொலைக்காட்சி விவாதத்திலும் கலந்துகொண்டார். அதே விவாதத்தில் கலந்துகொண்ட சுப.வீரபாண்டியன், அந்த இளைஞருக்கு நேர்ந்த அநீதி குறித்து பேசினார்.
தொலைக்காட்சி விவாதத்தில் செந்தில்
தொலைக்காட்சி விவாதத்தில் செந்தில்

ஆனால், அந்த இளைஞர் செந்தில், மது போதயில் தண்டவாளத்தில் சென்றபோது ரயில் மோடி கை, காலை இழந்தார் என்பது காவல்துறை விசாரணையில் பிறகு தெரியவந்தது.
இந்த நிலையில்தான் தான் தீக்குளித்ததோடு, ஒருதலையாக காதலித்த நவீனாவையும் பிடித்துக்கொண்டு அந்த அப்பாவி பெண்ணுக்கும் பெரும் தீக்காயத்தை ஏற்படுத்திவிட்டார்.
இதற்கிடையே, “ இந்த செந்திலுக்கு அன்று பரிந்து பேசினார் சுப.வீரபாண்டியன்” என்று குறிப்பிட்டு அவரை சிலர் சமூகவலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
ஆனால், “மிருக குணம் கொண்ட செந்தில் என்கிற அந்த இளைஞனுக்காக பேசியதை நினைத்து வெட்கமும், வேதனையும் அடைகிறேன்” என்று சுப. வீரபாண்டியன் தனது வலைப்பக்கத்தில் தனது வருத்தத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
சுப. வீரபாண்டியன்
சுப. வீரபாண்டியன்

அந்த முழுமையான பதிவு:
விழுப்புரத்துக்கு அருகில் நவீனா என்னும் பெண் செந்தில் என்னும் இளைஞனால் எரித்துக்கொலை செய்ய இருக்கும் செய்தி  மிகப்பெரும் வேதனை தரும் செய்தியாக வெளிவந்துள்ளது. இதே செந்தில் முன்பு ஒரு முறை தான் ஒரு பெண்ணை  காதலித்ததற்காக கைகால் வெட்டப்பட்டிருப்பதாக சொல்லி காவல்துறையில் புகார் கொடுத்து இருந்தார்.
அதனை ஒட்டி புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதத்தில் நானும் கலந்துகொண்டேன். அவன் பக்கம் நியாயம் இருப்பதாக எண்ணி, கைகால் வெட்டப்பட்ட  அவனுக்காக பரிதாபப்பட்டு  அன்று கருத்துக்களை நான் தெரிவித்தேன். அதற்காக இப்போது வெட்கமும், வேதனையும் அடைகிறேன்.
தன்னை விரும்பாத ஒரு பெண்ணை அடைய வேண்டும் அல்லது அழிக்க வேண்டும்  என்று நினைக்கும் மிருக குணம் கொண்ட  ஒருவனுக்காக பரிந்து பேசினோம் என்று எண்ணி இப்போது நான் துயரப்படுகிறேன். செந்தில் நடவடிக்கை  மிகக் கடுமையான கண்டனத்துக்கு உரியது.:
– இவ்வாறு தனது வலைப்பக்கத்தில் சுப.வீரபாண்டியன் வருத்தமும், கண்டனமும் தெரிவித்துள்ளார்.