நியூயார்க்

பேருந்து அளவிலான ஒரு சிறு கோள் பூமியில் இருந்து 36000 கிமீ தூரத்தில் நாளை பூமியைக் கடக்க  உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

                                                                மாதிரி புகைப்படம்

பூமியை நோக்கி சிறு கோள்கள் நகர்ந்து வருவது வழக்கமான ஒன்றாகும்.  அவற்றால் பொதுவாக எவ்வித ஆபத்தும் ஏற்படுவதில்லை.   இந்த சிறு கோள்கள் பூமியின் காற்று மண்டலத்துக்குள் நுழையாததே இதற்குக் காரணமாகும்.   கடந்த செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி அன்று விஞ்ஞானிகளால் கியூஎல் 2020 எனப் பெயரிடப்பட்ட ஒரு சிறு கோள் பூமியைக் கடந்து சென்றது.

அவ்வகையில் நாளை ஒரு புதிய சிறு கோள் பூமியைக் கடந்து செல்ல உள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாசா தெரிவித்துள்ளது.   சுமார் 10 நாட்களுக்குள் வரும் இந்த புதிய சிறு கோளுக்கு விஞ்ஞானிகள் எஸ்டபிள்யு 2020 எனப் பெயரிட்டுள்ளனர்.   இதன் அளவு சுமார் 15 முதல் 30 அடியாக இருக்கக் கூடும் எனத் தெரிவித்துள்ள விஞ்ஞானிகள் இந்த கோள் கிட்டத்தட்ட ஒரு பேருந்து அளவு இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

விஞ்ஞானிகளின் கணக்குப்படி இந்த சிறு கோள் பூமிக்கு 36000 கிமீ தூரத்தில் பூமியை கடந்து செல்ல உள்ளது.    இந்த சிறு கோளில் இருந்து வெளியாகும் ஒளியை வைத்து இதை அவர்கள் ஊகித்துள்ளனர்.  அத்துடன் இவ்வாறு பூமியை கடந்து செல்லும் இந்த சிறு கோள் மீண்டும் 2041 வரை பூமிக்குத் திரும்பி வராது எனவும் தெரிவித்துள்ளனர்.

அதே வேளையில் நாசா விஞ்ஞானிகள் 460 அடியை விட பெரியதாக உள்ள சிறு கோள்கள் பூமிக்கு அருகில் வரும் போது 90% வரை அபாயம் உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.  அத்தகைய சிறு கோள்கள்  பூமியின் பாதைக்குள் நுழைந்து பூமியில் மோத அதிக அளவில் வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

நாசா விஞ்ஞானிகள்,  ”இந்த விண்ணில் பறந்து வரும் பொருட்கள் பூமியின் மண்டலத்துக்குள் நுழைந்தால் அவை பல துண்டுகளாக மற்றும் பகுதிகளாக உடைந்து சிதறி விழும்.   அப்போது நெருப்பு பிடித்து அவை நெருப்பு பந்துகள் ஆக மாறும்.  இவ்வாறு உருவாகும் நெருப்புப் பந்துகள் அதிகம் பகுதிகளில் தென்படும். இவற்றை விண்கல் எனவும் இவ்வாறு சிதறுவதை விண்கல் மழை எனவும் அழைப்பது வழக்கமாகும்.