சென்னை,

ரும் 15ந்தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் பஸ்கள் ஓடாது என்று போக்குவரத்து தொழிலாளர் சங்கம் அறிவித்து உள்ளது.

இதுகுறித்து ஏற்கனவே நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து, தற்போது இன்று 4வது கட்ட பேச்சு வார்த்தை இன்று நடைபெற்று வருகிறது.

நாளை (12ந்தேதி) முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த தொழிலாளர் நலத்துறை ஆணையம்  அழைப்பு விடுத்துள்ள நிலையில் இன்று போக்குவரத்து துறை அமைச்சர் தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

வேலைநிறுத்தம் அறிவித்துள்ள போக்குவரத்து தொழிற்சங்க ஊழியர்களின் போராட்டத்தை கைவிடும் வகையில் ஏற்கனவே 3 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றும் தோல்வியில் முடிந்துள்ளது.

13வது ஊதிய ஒப்பந்தத்தை செயல்படுத்த வேண்டும் போக்குவரத்து ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட ரூ. 7 ஆயிரத்தை உடனடியாகத் திரும்ப வழங்க வேண்டும், பணி ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்க ரூ.1,500 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்திருந்தன.

அதைத்தொடர்ந்து போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொழிற்சங்கங்களுடன்  கடந்த 8 ந்தேதி போக்குவரத்து துறை தொழிற்சங்க நிர்வாகிகளுடன்  பல்லவன் இல்லத்தில் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது அவர், ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கான 500 கோடி ரூபாய் நிலுவைத்தொகை விரைவில் வழங்கப்படும் என தெரிவித்தார்.

ஆனால், அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்த நிலுவைத்தொகை போதாது என்றும் திட்டமிட்டபடி மே 15ம் தேதி வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று மீண்டும் போக்குவரத்து துறை அமைச்சர் தலைவர் 4ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்த பேச்சுவார்த்தையில்  48 தொழிற்சங்கங்களுடன் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சென்னை பல்லவன் இல்லத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்து ஸ்டிரைக்கை வாபஸ் பெற வைக்க பேச்சுவார்த்தையில் அமைச்சர் ஈடுபட்டுள்ளார்.