5வது நாளாக தொடரும் பேருந்து வேலைநிறுத்தம்: பொதுமக்கள், மாணவ மாணவிகள் அவதி

சென்னை:

 ஊதிய ஊயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று 5வது நாளாக நீடித்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள், வேலைக்கு செல்வோர், பள்ளி,கல்லூரி மாணவ மாணவிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.

அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் 13-ஆவது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்வது மற்றும் நிலுவை தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் இன்று 5வது நாளாக தொடர்ந்து வருகிறது.

இதற்கிடையில், சென்னை ஐகோர்ட்டு போராட்டத்துக்கு தடை விதித்தும், போராட்டம் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், வேலைக்கு வராதவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இனிமேல் பேச்சுவார்த்தை நடைபெறாது என்று  தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

இருந்தாலும் பெரும்பாலான அரசு பேருந்துங்கள் இன்னும் இயக்கப்படவில்லை. ஒருசில பேருந்துகளே தற்காலிக ஓட்டுனர்களால் இயக்கப்படுகின்றன. தற்காலிக ஓட்டுநர்கள்   ஓட்டிச் செல்லும் பேருந்துகள் விபத்தைச் சந்தித்துள்ளன. இதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக தமிழகம் மொத்தமும் முடங்கி இருக்கிறது. தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, நெல்லை முழுக்க 70 சதவீத பேருந்துகள் இயங்கவில்லை. கிராமப்புற பகுதிகளுக்கு செல்லும் 80 சதவீத பேருந்துகள் நிறுத்தப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் போக்குவரத்து தொழிலாளர்கள் சார்பாக இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் முறையிடப்போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே பணிக்கு வராத போக்குவரத்து தொழிலாளர்கள்மீது எஸ்டா சட்டத்தின்படி வேலையை விட்டு  நீக்க வேண்டும் என்ற வழக்கும் இன்று விசாரணைக்கு வர உள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று ஐகோர்ட்டு என்ன கூறப்போகிறது என்பது தெரியவில்லை. இதன் காரணமாக போக்கு வரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் ஆகுமா என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 5வது நாளாக தொடரும் பேருந்து வேலைநிறுத்தம்: பொதுமக்கள், Bus strike continues on 5th day: public and students are heavy affect, மாணவ மாணவிகள் அவதி
-=-