சென்னை,

திய ஒப்பந்தம், ஓய்வூதிய நிலுவைத்தொகை, வருங்கால வைப்புநிதி நிலுவைத் தொகை ஆகியவற்றை வழங்க வேண்டும்   உள்ளிட்ட 7 அம்சகோரிக்கையை வலியுறுத்தி தொ.மு.ச., சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி உள்பட 10 தொழிற்சங்கங்கள் இன்றுமுதல் காலவரையற்ற போராட்டத்தில் குதித்துள்ளன.

இதையடுத்து தமிழக அரசும், தொழிலாளர் ஆணையமும் பலசுற்று பேச்சுவார்த்த நடத்தியும், இரு தரப்பினருக்கும் இடையே எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை. இதன் காரணமாக இன்று காலை முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக் தொடங்கியது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் இன்று பிற்பகல் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு தொழிலாளர் நல ஆணையர் யாசின் பேகம் அழைப்பு விடுத்துள்ளார்.

 

அதைத்தொடர்ந்து இன்று பிற்பகல் சுமார் 3.30 மணி அளவில்  முத்தரப்பு பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில்  47 தொழிற்சங்கங்களுக்கு ஆணையர் அழைப்பு விடுத்துள்ளார். போக்கு வரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பாக பேச்சு வார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பேருந்துகளை இயக்க விடாமல் தடுத்ததாக 36 போக்குவரத்து ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுதும் 45 அரசு பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன.  கண்ணாடிகளை உடைத்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.