சென்னை,

பேருந்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் நேற்று நான்காவது நாளாக நீடித்தது. இதனால் பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கான ஒய்வூதியப்பணிகளை நிறுத்தி வைத்துள்ளது மற்றும் இதர கோரிக்கைகள் குறித்து 47 தொழிற்சங்கங்களுடன் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். 23 முறை நடந்த இந்த பேச்சுவார்த்தை முடிவு எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது

இதையடுத்து முன் அறிவிப்பு இல்லாமல் கடந்த வியாழக்கிழமை மாலையில் இருந்து போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்துக்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம்  உடனடியாக பணிக்கு திரும்பவேண்டும் என்று உத்தரவிட்டது.


இதேபோல தொழிலாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்பவேண்டும் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வலியுறுத்தினார்.

ஆனால் நீதிமன்ற உத்தரவு மற்றும் அமைச்சர் வேண்டுகோளை ஏற்க மறுத்து போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதற்கிடையே போக்குவரத்து துறை சார்பில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பும் பணியையும் நேற்று முன்தினம் முதல் துவங்கியது.  ஆனாலும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் போராட்டத்தை தொடர்கின்றன.

இந்த நிலையில்  ஆளும் அ.தி.மு.க.வின் அண்ணா தொழிற் சங்கத்தை சேர்ந்தவர்கள் மற்றும் தற்காலிக ஓட்டுநர், நடத்துநர்கள் மூலம் குறைந்த அளவிலான பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

.இந்த நிலையில் நேற்று நான்காவது நாளாக போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் தொடர்ந்தது.

நேற்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி இருந்தன. ஆனால் இன்று திங்கட் கிழமை அலுவல் நாள் என்பதால் பேருந்து வேலை நிறுத்தம் பெரும் பிரச்சினையாக வெடிக்கும்.

இதுகுறித்து சென்னை பயணிகள்,  “அரசு  பேருந்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக பேருந்துகள் இயங்காமல் மிகவும் சிரமப்படுகிறோம். மின்சார மற்றும் மெட்ரோ ரயில்களால் பயணிகளின் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியவில்லை. ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோக்களில் இரு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கிறது. ஆகவே போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கையை பரிசீலித்து உடனடியாக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.