தமிழகத்தில் தொழில் முதலீடு: உயர்மட்ட குழுவுடன் முதல்வர் ஆலோசனை

சென்னை:  தமிழக்ததில் தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு வருவது  தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட குழுவினருடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்தினார்.

கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில்  சரிவடைந்துள்ள  தொழில்பாதிப்பு மற்றும் சரிவடைந்துள்ள  பொருளாதாரத்தை மீட்க தமிழகஅரசு,  தலைமைச்செயலாளர் தலைமையில் குழு அமைத்து,  வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.  அதன் தொடர்ச்சியாக  முதலீடுகளை ஈர்க்க, வெளிநாட்டு துாதர்கள் உடன் சந்திப்பு மற்றும் சிறப்பு பணிக்குழு அமைத்து பல நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதைத்தொடர்ந்து ஏராளமான நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில்தொடங்க விருப்பம் தெரிவித்து வருகின்றன.

தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளின் பயனாக, இந்த நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான முதல் ஆறு மாதங்களில் இந்திய அளவில் மிக அதிக முதலீடுகளை ஈர்த்த முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. 2020–ம் ஆண்டு செப்டம்பர் வரை, 42 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், 31,464 கோடி ரூபாய் முதலீடுகளுக்கு கையெழுத்திடப்பட்டுள்ளன.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் 12.10.2020 அன்று தலைமைச் செயலகத்தில், தொழில்துறை சார்பில், சென்னை, காஞ்சிபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், திருப்பூர், திருவள்ளூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 14 தொழில் நிறுவனங்கள் தங்கள் புதிய முதலீட்டுத் திட்டங்களை 10,055 கோடி ரூபாய் முதலீட்டில் துவங்கிட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இத்திட்டங்களின் மூலம், சுமார் 7 ஆயிரம் நபர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும்.

இதுவரை மொத்தம் 41 ஆயிரத்து 519 கோடி அளவுக்கு முதலீடு பெற்றுள்ளன. 56 தொழிற்நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளன.

தொழில் துவங்க வருபவர்களுக்கு சிரமமின்றி அனுமதி பெறவும், ஒரே இடத்தில் எல்லா அனுமதிகள் பெறவும், தேவையான உட்கட்டமைப்பு வசதிகள், குடிநீர், மின்சாரம், சாலை வசதி என அனைத்தும் செய்து தந்துள்ளார்.  இந்த நிலையில், தொழில் நிறுவனங்களுக்கு தேவையான வசதிகள், சலுகைகள் அளிப்பது குறித்தும், மேலும் தொழில் முதலீடுகளை ஈர்ப்பது குறித்து,  சென்னை தலைமை செயலகத்தில் தொழில்துறையின் உயர்மட்ட குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார்

இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, எம்.சி. சம்பத், ஆர்.பி. உதயகுமார், பா.பென்ஜமின், தலைமைச் செயலாளர் க.சண்முகம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, தொழில் துறை முதன்மைச் செயலாளர் என். முருகானந்தம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் ராஜேஷ் லக்கானி,

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை முதன்மைச் செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு) கே.கோபால், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் நீரஜ் மித்தல், நில நிர்வாக ஆணையர் பங்கஜ் குமார் பன்சல், தொழில் துறை ஆணையர் அனு ஜார்ஜ், நகர் ஊரமைப்பு இயக்குநர் (முழு கூடுதல் பொறுப்பு) பி. முருகேஷ், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் ஏ.வி. வெங்கடாசலம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மேலும் அதிக அளவு தொழில் முதலீடுகளை ஈர்ப்பது பற்றியும் தொழில் முதலீடு செய்தவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தருவது பற்றியும் மேலும் தொழில் வளர்ச்சிக்கு தேவையான என்னெ்ன நடவடிக்கைகளை எடுப்பது பற்றி இக்கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டதாக தெரிகிறது.

அதன் தொடர்ச்சியாக, 14 புதிய தொழில் திட்டங்களை, தமிழ்நாட்டில் துவங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டன.

தற்போது நிலவி வரும் சூழ்நிலையின் காரணமாக, இந்த 14 திட்டங்களில், 4 திட்டங்களுக்கு காணொலிக் காட்சி மூலமாகவும், 10 திட்டங்களுக்கு நேரடியாகவும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.