வரும் 2025க்குள் சுகாதார செலவு உற்பத்தியில் 2.5% ஆக உயரும் : மோடி

டில்லி

ரும் 2025க்குள் பொதுச் சுகாதார செலவுகள் நாட்டின் உற்பத்தி மதிப்பில் 2.5% ஆக உயரும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொதுச் சுகாதார செலவை வைத்தே அந்த நாட்டு மக்களின் ஆரோக்கியம் கணக்கிடப்படுகிறது. பொதுச் சுகாதார செலவின் விகிதம் அந்த நாட்டின் உற்பத்தி மதிப்பைக் கொண்டு கணக்கிடப்படுகிறது. தற்போதுள்ள நிலையில் உலக நாடுகளில் சுகாதாரச் செலவு குறைவாக செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கிறது. தற்போது நாட்டின் உற்பத்தி மதிப்பில் 1.6% மட்டுமே சுகாதார செலவு செய்யப்படுகிறது.

தாய் சேய் உடல்நலப் பாதுகாப்பு குறித்த ஒரு சர்வதேச கருத்தரங்கு நேற்று டில்லியில் நடந்தது. அதில் உலகில் உள்ள 85 நாடுகளை சேர்ந்த 1200 பிரதிநிதிகள் கலந்துக் கொண்டனர். இதில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டு உரையாற்றினார். அவர் தனது உரையில், “இந்தியாவில் தினமும் 2.5 கோடி குழந்தைகள் பிறக்கின்றன. தற்போது அரசின் பச்சிளங்குழந்தைகள் நலத்திட்டத்தின் கீழ் தினமும் ஆயிரத்தில் 840 குழந்தைகள் காக்கப்படுகின்றன. இந்த எண்ணிக்கை கடந்த 4 வருடங்களில் கணிசமாக அதிகரித்துள்ளது.

பிறந்த குழந்தைகளில் சுமார் 10 லட்சம் குழந்தைகள் நோய்வாய்ப்படுகின்றன. அவற்றை கவனிக்க நாடெங்கும் 794 குழந்தைகள் நல மையம் உள்ளன. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் நாட்டு மக்களின் உடல்நலம் பெரிதும் கவனிக்க்கபடுகிறது. இதன் மூலம் பல குடும்பங்கள் தங்களின் மருத்துவச் செலவு குறித்த கவலை இன்றி வாழ்கின்றனர். அது மட்டுமின்றி மாநிலங்கள் மூலம் பல சுகாதார மையங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அரசின் மருத்துவக் காப்பிட்டு திட்டத்தில் பல பெரிய மருத்துவ மனைகள் இணைக்கபட்டுள்ளன. இதன் மூலம் ஒவ்வொரு குடும்பமும் ரு.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெற்றுள்ளன. இந்த திட்டத்தில் 10.74 கோடி குடும்பங்கள் பயனடைந்துள்ளன. தற்போது நாட்டில் பொதுச் சுகாதாரத்துக்காக உற்பத்தி மதிப்பில் 1.6% செலவிடப்படுகிறது. அது வரும் 2025க்குள் உற்பத்தி மதிப்பில் 2.5% ஆக உயரும்” என தெரிவித்துள்ளார்.