பயிர்காப்பு திட்டம் : இன்ஷ்யூரன்ஸ் கம்பெனிகளுக்கு 10000 கோடி ரூபாய் லாபம்

--

டில்லி

ரு நிறுவனம் நடத்திய மதிப்பீட்டின்படி மோதி அரசு கொண்டு வந்த பயிர்காப்பு திட்டத்தால் காப்பீடு நிறுவனங்கள் சுமார் ரூ. 10000 கோடி லாபம் ஈட்டியுள்ளது.

செண்டர் ஃபார் சர்விஸ் அண்ட் என்விரொன்மெண்ட் என்னும் நிறுவனம் நாடு முழுவதும் ஒரு கணக்கெடுப்பு எடுத்து தனது மதிப்பீட்டை அளித்துள்ளது.

அதில் காணப்படுவதாவது :

தேசிய விவசாய பாதுகாப்புத் திட்டம், சென்ற ஏப்ரல் 2016 முதல், பிரதம மந்திரி பயிர் பாதுகாப்புத் திட்டம் என மாற்றப்பட்டுள்ளது.   இது விவசாயிகளின் நலனுக்காக மாற்றியமைக்கப்படுவதாக கூறப்பட்டது.

ஆனால் விவசாய அமைச்சகம் கூற்றுப்படி, விவசாயிகளின் இழப்பில் வெறும் மூன்றில் ஒரு பங்க்குக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப் பட்டுள்ளது.   சரியாகச் சொன்னால் 32.45% மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.  அதாவது ரூ.6000 கோடி இழப்புக் கோரப்பட்டதில், ரூ 2000 கோடி கூட தரப்படவில்லை.

காப்பீடு நிறுவனங்களுக்கு செலுத்தப்பட்ட மொத்த பிரிமியம் தொகை 15891 கோடி ரூபாய்கள்.  இழப்பு கேட்கப்பட்டது ரூ.  5962 கோடிகள்.  இதில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே தரப்பட்டது.   மீதமுள்ளதும்  விரைவில் தரப்படும் என சொல்லப்படுகிறது.

மொத்தப் பணமும் தரப்பட்டதாக வைத்துக் கொண்டாலும் காப்பீடு நிறுவனங்களுக்கான லாபம் ரூ 10000  கோடி ஆகிறது.   மேலும் அதிக பயணாளிகள் சேரும் போது பிரிமியம் தொகை குறையும் என காப்பீடு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இந்த பிரிமியத்தில் மத்திய மாநில அரசின் பங்கும் உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

சிஏஜி அறிக்கையின்படி, இழப்பீடு முழுமையாகத் தரப்படாத காரணம், முழுக்க முழுக்க மாநில அரசுகளின் மெத்தனமே என சொல்லப்படுகிறது.   மத்திய அரசு தனது  பங்கை முழுமையாக அளித்து விட்ட போதிலும் இன்னும் பல மாநில அரசுகள் தங்களின் பங்கை செலுத்த வில்லை.