பெங்களூரு

மோசடி குற்றச்சாட்டில் சிக்கிய பெங்களூரு ஐ எம் ஏ ஜுவல்ஸ் அதிபர் மன்சூர் கான் தன்னை கொல்லலாம் என்னும் பயத்தில் சரண் அடைய விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

ஐ எம் ஏ ஜுவல்ஸ் என்னும் நிதி நிறுவனத்தை பெங்களூருவை சேர்ந்த மன்சூர் கான் தொடங்கி ஏராளமானோரிடம் முதலீட்டை பெற்றார்.   அவர் அளித்த அதிக வட்டி வாக்குறுதியில் மயங்கிய பலரிடம் பெற்ற முதலீடு கோடிக்கணக்கான ரூபாயை எட்டியது.  கடந்த மூன்று மாதங்களாக இந்த நிறுவனம் வட்டியை செலுத்தாமல் இருந்துள்ளது.

இதனால் பலரும் நிறுவனத்தை முற்றுகை இட்டதால் மன்சூர் கான் தலைமறைவானார்.  அத்துடன் அவர் அளித்த ஒரு ஆடியோ பதிவில் சில அரசியல்வாதிகள், மற்றும் ரவுடிகளின் தொந்தரவால் தாம் தற்கொலை செய்துக் கொள்ளும் முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்தார்.    இது அரசியல் உலகிலும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அடுத்து வெளியிட்ட  வீடியோவில், “நான் பொதுமக்களிடமும் காவல்துறையினரிடமும் எனக்கு தொல்லை கொடுப்போரின் பெயர்களை தெரிவிக்க உள்ளேன்.    அதற்கு உங்களின் ஒத்துழைப்பு தேவை.  ஏனெனில் நான் கூறப்போகும் பெயர்கள் மிகவும் பெரிய மனிதர்களுடையது.    அவர்கள் என்னை உயிருடன் விடமாட்டார்கள்” எனக் கூறி இருந்தார்.

இன்னும் அந்த வீடியோவின் நம்பகத்தன்மை சந்தேகத்துக்கு உரியதாகவே இருக்கிறது என காவல்துறையினர் தெரிவித்துள்ளன்ர்.    அத்துடன் கடந்த 14 ஆம் தேதி அன்று வெளிநாட்டில் இருந்து கிளம்ப இருந்த தாம் மிரட்டல் காரணமாக விமான நிலையத்தில் இருந்து சிலர் ஓட வைத்துள்ளனர் என அவர் கூறிய போதிலும் அவர் இருக்கும் நாடு பற்றி தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் அமலாக்கப் பிரிவுத் துறையினர் அவருக்கு வரும் 24 அன்று ஆஜராக வேண்டும் என உத்தரவு இட்டனர்.  மேலும் ஐ எம் ஏ ஜுவல்ஸ் நிறுவன டில்லி அலுவலகத்தை சோதனை இட்டு ரூ. 20 கோடி மதிப்புள்ள நகைகளை பறிமுதல் செய்தனர்.

நேற்று மன்சூர் கான் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் தாம் சரணடைய தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.   மேலும் தாம் பல பெரிய மனிதர்களின் பெயர்களை வெளியிட உள்ளதால் தம்மை இந்த ஊழலுக்கு  பின்னால் உள்ளவர்கள்  தம்மை கொன்று விடலாம் என பயப்படுவதாகவும் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.