சென்னை:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவையடுத்து காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் மாதத்திற்குள் நடத்தப்படும் என்று  தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த 2011ல் நடந்த தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தலின் போது ஆர்.கே. நகர் தொகுதியில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த வெற்றிவேல் வெற்றி பெற்றார்.

அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு பெங்களூரு தனி நீதிமன்றத்தில் சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை அளித்தது. இதையடுத்து அவர் முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டியதாயிற்று.  அவரது எம்.எல்.ஏ. பதவியும் பறிபோனது.

பிறகு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து, வழக்கில் இருந்து விடுதலை பெற்றார் ஜெயலலிதா. இதையடுத்து அவர் மீண்டும் முதல்வர் பொறுப்பேற்றார். அதோடு. எம்.எல்.ஏ. ஆகவேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டது.

தனது கட்சி வெற்றி பெற்றிருந்த தொகுதிகளில் ஒன்றான ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட விரும்பினார். அத்தொகுதியில் ஏற்கெனவே எம்.எல்.ஏவாக இருந்த வெற்றிவேலை ராஜினாமா செய்ய வைத்து, அத் தொகுதியில் போட்டியிட்டு ஜெயலலிதா வென்றார்.

அடுத்து 2016ம் ஆண்டு வந்த தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதி உடல் நலக்குறைவால் ஜெயலலிதா காமலானார். இதனால் அத்தொகுதி காலியாக உள்ளது.

தொகுதி எம்.எல்.ஏ. மரணமடைந்தாலோ, ராஜினாமோ செய்தாலோ அத்தொகுதிக்கு ஆறு மாத காலத்துக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்பது விதி.

இந்த நிலையில், தற்போது தேர்தல் ஆணையம், வரும் ஏப்ரல் மாதத்துக்கள் ஆர்.கே. நகர் தொகுதியில் தேர்தல் நடத்தப்படும் என்றும் விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

ஆர்.கே. நகர் அ…தி.மு.கவுக்கு செல்வாக்கான தொகுதி. அதே நேரம் தற்போது அ.தி.மு.கழகம்,  சசிகலா அணி, ஓ.பி.எஸ். அணி என இரு பிரிவாக பிரிந்திருக்கிறது.  கட்சி நிர்வாகிகள், எம்.எல்.ஏ, எம்.பிக்களில் பெரும்பாலோர் சசிகலாவை ஆதரிக்கிறார்கள். ஆனால்  தொண்டர்கள் மத்தியில் ஓ.பி.எஸ்ஸுக்கு ஆதரவு அதிகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.  இதற்கிடையில் தனி ஆர்வத்தனம் வாசிக்கும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தானும் ஆர்.கே நகர் தொகுதியில் போட்டியிடப்போவதாக ஏற்கெனவே அறிவித்துள்ளார்.

மேலும் தற்போது அ.,.தி.மு.க.வில் நிலவும் அதிகாரப்போட்டியை பார்த்து வெறுப்புற்றிருக்கும் கணிசமான வாக்காளர்கள் தி.மு.க.வை ஆதரிக்கக்கூடும் என்றும் ஒரு கருத்து உலவுகிறது.

இந்தக் கணக்கையெல்லாம் மீறி, “ஓட்டுக்கு நோட்டு கொடுப்பவருக்கே வெற்றி கிடைக்கும். இதில் முதலிடம் பிடிக்கப்போவது சசிகலா அணியே” என்றும் ஒரு கருத்து உலவுகிறது.

ஆக, ஆர்.கே. நகரில் வெற்றிக்கனி பறிக்கப்போவது யார் என்று இப்போதிலிருந்தே எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.