வாக்கு ஒப்புகை இயந்திர கோளாறு : புகார் அளித்தால் சிறை தண்டனை??

கவுகாத்தி

அசாம் மாநில முன்னாள் காவல்துறை இயக்குனர் ஹரே கிருஷ்ண தேகா வாக்கு ஒப்புகை இயந்திரம் குறித்த தவறான புகார் அளித்தால் சிறை தண்டனை கிடைக்கும் என தேர்தல் அதிகாரி தம்மை மிரட்டியதாக கூறி உள்ளார்.

நேற்று முன் தினம் மக்களவை தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடந்தது. இதில் 117 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்கு ஒப்புகை இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. வாக்காளர் தாம் அளித்த வாக்கு சரியான கட்சி மற்றும் வேட்பாளருக்கு சென்றுள்ளதா என்பதை இதில் உறுதிப்படுத்த முடியும்.

அசாம் மாநிலத்தின் முன்னாள் காவல்துறை இயக்குனர் ஹரே கிருஷ்ண தேகா லெசித் நகர் தொடக்கப்பள்ளியில் அமைந்துள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார். அப்போது அவர் தாம் வாக்களித்த வேட்பாளருக்கு பதில் மற்றொரு வேட்பாளர் பெயர் வாக்கு ஒப்புகை இயந்திரத்தில் காட்டப்பட்டதாக புகார் அளித்தார்.

இது குறித்து தேகா, “வாக்குச்சாவடி அதிகாரி எனது வாக்கை ரத்து செய்ய முடியாது என தெரிவித்தார். மேலும் அவர் இதை எதிர்த்து புகார் அளிக்க ரூ.2 கட்டணம் செலுத்த வெண்டும் எனவும் அதன் பிறகு எனது புகார் மீது விசாரணை நடக்கும் எனவும் தெரிவித்தார்.

அது மட்டுமின்றி எனது புகார் தவறானதாக இருந்ததாக விசாரணையில் கண்டறியப்பட்டால்  எனக்கு ஆறு மாத சிறை தண்டனையும் ரூ.10000 அபராதமும் விதிக்கப்படும் என தெரிவித்தார். நான் சிறை வாசத்துக்கு பயந்து புகார் அளிக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.

இது குறித்து அசாம் மாநில தேர்தல் அதிகாரி, “முன்னாள் காவல்துறை இயக்குனர் தேகா இது போல குறைகள் நேர்ந்தால் அது குறித்து உயர் அதிகாரிகளிடம் உடனடியாக தெரிவித்து இருக்க வேண்டும். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. தேர்தல் சட்டபடி இது போல புகார்கள் வந்தால் புகார் அளித்தவர் முன்பாக மாதிரி வாக்களித்து அந்த இயந்திரத்தை சோதனை செய்வார். அந்த புகார் சரியானதாக இருக்கும் என்றால் தவறாமல் புகார் அளிக்கலாம்” என தெரிவித்துள்ளார்.

இதைப் போலவே நேற்று முன் தினம் கேரளாவில் எபின் பாபு என்னும் வாக்காளர் தான் வாக்களித்த வேட்பாளருக்கு பதில் மற்றொரு வேட்பாளரின் பெயர் வாக்கு ஒப்புகை இயந்திரத்தில் தெரிந்ததாக புகார் அளித்துள்ளார். அந்த வாக்குச்சாவடி அதிகாரி இயந்திரத்தை சோதித்ததில் எபின் பாபு கூறியது தவறான புகார் என தெரிய வந்தது. அதை ஒட்டி கைது செய்யப்பட்ட எபின் பாபு அதன் பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.