சென்னை

கூவம் நதிக்கரையில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கட்டிடங்கள் வரும் ஜூன் மாதத்துக்குள் முழுவதுமாக அகற்றப்படும் என சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை நகரில் ஓடும் கூவம் நதிக்கரையை ஆக்கிரமித்து ஏராளமான கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.  அவற்றை இடிக்கும் பணியில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் முழு மூச்சுடன் ஈடுபட்டுள்ளனர்.   ஆயினும் பல பகுதிகளில் இந்த ஆக்கிரமிப்புக்களை அகற்றப் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  எதிர்ப்புக்களுக்கு இடையே கட்டுமானங்கள் இடிக்கும் பணி நடந்து வருகிறது.

சென்னையில் கோயம்பேட்டை அடுத்த சத்ய சாய் குடியிருப்பு பகுதியில் மட்டும் கூவம் ஆற்றுப்படுகையை ஆக்கிரமித்து 222 வீடுகள் கட்டப்பட்டுள்ளன., சென்னை மாநகராட்சியின்  கூவம் நதி புனரமைப்பு திட்டத்தின் கீழ் இந்த பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றிப் புனரமைக்கத் திட்டமிடப்பட்டது.    இதையொட்டி பொதுப்பணித்துறையானர் பொக்லைன் இயந்திரங்களுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியைத் தொடங்கினர்.

இந்த கட்டிடங்கள்  முறையான அறிவிப்பின்றி அகற்றப்படுவதாகக் குற்றம்சாட்டி அப்பகுதி மக்கள் பொக்லைன் இயந்திரத்தைச் சிறைபிடித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  ஆயினும் பொதுமக்கள் எதிர்ப்பை மீறி ஆக்கிரமிப்பை அகற்றும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டனர்.  சென்னை வழக்கறிஞர் சதீஷ்  ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிரான மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போதே ஆக்கிரமிப்புகளை அகற்றுவது நியாயமா எனக் கேள்வியெழுப்பினார்.

இதற்கு அதிகாரி கவிதா முறையாக அறிக்கை வழங்கப்பட்ட பின்னரும் இடத்தை காலி செய்ய மறுத்ததாலேயே ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியைத் தொடங்கியதாகவும், இந்த பகுதி மக்களுக்காக பெரும்பாக்கத்தில் இடம் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் கவிதா தெரிவித்தார்.  மேலும் அவர் ஆக்கிரமிப்புக்களை அகற்றும் பணி மும்முரமாக நடந்து வருவதாகவும் வரும் ஜூன் மாதத்துக்குள் ஆக்கிரமிப்புக்கள் அனைத்தும் முழுமையாக அகற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.