காத்மண்டு – லாசா ரெயில் பாதை : இந்தியாவிடம் இருந்து நேபாளத்தை தன் வசம் இழுக்கும் சீனா

 

காத்மண்டு

சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது நேபாள பயணத்தில் அந்நாட்டுக்குப் பல உதவிகள் அளிக்க உள்ளதாக வாக்களித்துள்ளது.

இந்தியாவின் அண்டைநாடான நேபாள நாட்டுடன் இந்தியாவுக்கு நல்லுறவு உள்ளது.  சீன எல்லையில் உள்ள நேபாளத்துக்கு உதவி வரும் இந்தியா அதன் மூலம் சீனாவின் அச்சுறுத்தலில் இருந்து தப்பி வந்தது.  இதனால் சீனா நேபாளத்தை எப்போதும் கண்காணிப்பில் வைத்திருந்தது.  அதே வேளையில் நேபாளத்துக்கு இந்தியா உதவி வருவதால் அந்நாட்டை இந்திய அரசு தனக்காகப் பல பாதுகாப்புப் பணிகளுக்கு உதவப் பயன்படுத்தி வந்தது.

சீன அதிபர் ஜி ஜின்பிங் சமீபத்தில் இரு நாட்கள் சுற்றுப்பயணமாக நேபாள நாட்டுக்குச் சென்றிருந்தார். அப்போது அவர் நேபாள நாட்டுக்குப் பல உதவிகள் செய்ய வாக்குறுதி அளித்துள்ளார்.   நேபாள நாட்டின் சுதந்திரத்துக்கும் ஒருமைப்பாட்டுக்கும் பாதுகாப்பு அளிக்கத் தயாராக உள்ளதாக ஜி ஜின்பிர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக நேபாள தலைநகர் காத்மண்டுவில் இருந்து திபெத் பகுதியில் உள்ள ஷிகட்சே என்னும் இடம் வரை ரெயில்  பாதை அமைக்கச் சீனா உதவ உள்ளது.  ஷிகட்சேவில் இருந்து திபெத் பகுதியில் உள்ள லாசா நகருக்கு ஏற்கனவே ரெயில் பாதை உள்ளது.   இதன் மூலம் காத்மண்டுவில் இருந்து திபெத் பகுதிக்கு தற்போதுள்ள ஐந்து மணி நேரப் பயணம் இரண்டு மணியாகக் குறைய உள்ளது.

ஏற்கனவே இந்தியாவிலிருந்து நேபாளத்துக்கு பெட்ரோலிய குழாய்கள் அமைப்பது மற்றும் பாட்னாவிலிருந்து காத்மண்டுவுக்கு ரெயில் பாதை அமைப்பது போன்ற பணிகள் நிலுவையில் உள்ளன.   இந்தப் பணிகள் வெகுநாட்களாகச் செய்யப்படாமல் உள்ளதால் நேபாள அரசு அதிருப்தி அடைந்திருந்தது.

இந்திய நாட்டுக்குள் நேபாளத்தைச் சேர்ந்தவர் பணி புரிய முடியும் என்பதால் இந்திய ரூபாய் நோட்டுக்கள் நேபாளத்தில் பெருமளவு புழக்கத்தில் இருந்தன.  கடந்த 2016 ஆம் வருடம் பிரதமர் மோடியால் அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்திய நோட்டுக்களில் ஒரு பகுதி மட்டுமே மாற்றப்பட்டன.  இது நேபாள பொருளாதாரத்தில் கடும் பின்னடைவை ஏற்படுத்தியது.

தற்போதுள்ள நிலையில் சீனா உதவியை நேபாளம் ஏற்றுக் கொள்வதன் மூலம் அந்நாடு இந்தியாவிடம் இருந்து விலகி சீனாவை நோக்கி நகர்வதாக அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.  அத்துடன் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியும் சீனாவுக்கு ஆதரவைத் தருவதால் இந்தியா தனது நேபாள நட்பைப் பலப்படுத்த வேண்டிய அவசியத்தில் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கார்ட்டூன் கேலரி