நாங்குநேரி, விக்கிரவாண்டியில் நாளை இடைத்தேர்தல்: வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்

தமிழகத்தின் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளிலும், புதுவையின் காமராஜ் நகர் தொகுதிகளில் நேற்று மாலையுடன் தேர்தல் பரப்புரை ஓய்ந்த நிலையில், நாளை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிக்கும், புதுவையின் காமராஜ் நகர் தொகுதிக்கும் நாளை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாங்குநேரியில் அதிமுக சார்பில் ரெட்டியார்பட்டி நாராயணனும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரனும் போட்டியிடுகின்றனர்.

விக்கிரவாண்டி தொகுதியில் நேரடியாக களம் கண்டுள்ள திமுக, அதன் வேட்பாளராக நா.புகழேந்தியை களமிறக்கியுள்ளது. அதேநேரம் அதிமுக தரப்பில் முத்தமிழ்செல்வன் போட்டியிடுகிறார். விக்கிரவாண்டி தொகுதியில், திமுக வேட்பாளராக நா.புகழேந்தியும், அதிமுக வேட்பாளராக, முத்தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார்கள். இதையடுத்து இரு தொகுதிகளிலும் கடந்த 15 நாட்களாக அனல் பறக்கும் பிரசாரம் நடந்தது.

அதைப்போல, புதுச்சேரியின் காமராஜ் நகர் தொகுதியில் காங்கிரஸ் தரப்பில் ஜான்குமாரும், அதிமுக கூட்டணியில் என்.ஆர் காங்கிரஸ் சார்பில் புவனா உட்பட 9 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

மூன்று தொகுதிகளிலும் திமுக தரப்பில் அதன் தலைவர் மு.க ஸ்டாலின், கூட்டணி கட்சியான காங்கிரஸ மாநில தலைவர் கே.எஸ் அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகதீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் கடந்த 1 மாத காலமாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

அதைப்போலவே, அதிமுக தரப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், கூட்டணி கட்சி தலைவர்களான தேமுதிக பொருளாளரான விஜயகாந்த், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், நடிகர் கார்த்திக், பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.

பரப்புரையின் கடைசி நாளான நேற்று திமுக தரப்பில் விக்கிரவாண்டியில் பொதுக்கூட்டம் போடப்பட்டது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் வாக்கு சேகரிக்க, அதிமுக தரப்பில் அதே விக்கிரவாண்டியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாக்கு சேகரித்தார். மூன்று தொகுதிகளிலும் நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் பரப்புரை ஓய்ந்த நிலையில், நாளை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

நாங்குநேரியில் மொத்தம் 2,57,140 வாக்காளர்கள் வாக்களிக்க 299 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதைப்போலவே விக்கிரவாண்டியில் 2.5 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க 275 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மின்னணு வாக்கு இயந்திரங்களில் வாக்குச்சீட்டுகள் பொருத்தப்படும் பணிகளும் நிறைவடைந்துவிட்டன.

நாளை பதிவாகும் வாக்குகள் வரும் 24ம் தேதி பல சுற்றுக்களாக எண்ணப்பட்டு அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி