சி.பி.எம். கட்சி பாடகரும், அதன் கலைப்பிரிவான தமுஎகசவின் நெல்லை மாவட்டச் செயலாளருமான   திருவுடையான் சாலை விபத்தில் அகால மரணம் அடைந்தார்.
தமுஎச கலைஇரவுகளில் மேடைதோறும் தனது பாடல்களால் மக்களை  ஈர்த்தவர் திருவுடையான்.  அரசியல் ரீதியான பாடல்களை உணர்ச்சிகரமாக பாடிவர் மட்டுமல்ல… “ஆத்தா உன் சேல..” போன்ற உணர்வு ரீதியான பாடல்களாலும் அனைவரையும் கவர்ந்தவர்.
thiru
உணர்வ அந்த ஆகாயத்த  போல, தொட்டில் கட்டி தூங்க, தூளி கட்டி ஆட ஆத்துல மீன் பிடிக்க அப்பனுக்கு தல தொவட்ட. பாத்தாலே சேர்த்தனைக்க  தோணும், செத்தாலும் என்னை பொத்த வேணும் என.. உள்ளம் உருக செய்யும் உண்மையான கலைஞன் தோழர் திருவுடையான்.
சேலத்தில் நிகழ்சிக்கு சென்று விட்டு சங்கரன் கோவிலுக்கு  திரும்பிக்கொண்டிருந்தார் திருவுடையான். அப்போது  அதிகாலை சுமார் 3 மணியளவில் மதுரை அருகே உள்ள வாடிப்பட்டி புறவழி சாலையில் திருவுடையான் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது. இதில் திருவுடையான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் சென்ற அவரது தம்பி உள்ளிட்ட தோழர்கள் காயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவுடையான் ஓவியரும் கூட.  சி.பி.எம். கட்சியின் சங்கரன் கோவில் நகரச்செயலாளராக  இருந்தவர்.
இவர் குறித்து, பத்திரிகையாளர் குமரேசன் தெரிவித்த ஒரு சம்பவம்:
“ஒரு அரசியல் கட்சியின் தலைவர் தனது ஒரு நிறுவனத்தின் பாடகராகப் பொறுப்பேற்க அழைத்தார். மாதாமாதம் பெரியதொரு தொகை வழங்குவதாகக் கூறினார்.
“நான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர். கட்சியின் சங்கரன்கோவில் நகரச் செயலாளர். இந்த இயக்கப் பணிகளைத் தொடரவே விருமபுகிறேன். உங்கள் அமைப்பில் இணைய முடியாது, மன்னியுங்கள்,” என்று பணிவோடு சொன்னார் தோழர். சொந்தப் பொருளாதாரத்தை வளப்படுத்திக்கொள்ளக் கிடைத்த வாய்ப்பைப் பொருட்படுத்தாமல் செங்கொடி இயக்கத்தின் கானமாய் ஒலித்துவந்தார்.
முற்போக்கு மேடைகளின் முன்னணிப் பாடகராக மட்டுமல்ல முன்னுதாரணத் தோழராகவும் திகழ்ந்தவர் திருவுடையான்” என்று குமரேசன் குறிப்பிட்டார்.