குடியுரிமை சட்டம் எதிர்த்து தீவிரமாகும் போராட்டம்: டெல்லியின் பல பகுதிகளில் ஏர்டெல் மொபைல் இணையதளசேவை முடக்கம்

டெல்லி:

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக டெல்லியில் மாணவர்கள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், இணையதள சேவைகள் முடக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், டெல்லியின் பல பகுதிகளில் தனது மொபைல் இணையதள  சேவையை தற்காலிகமாக முடக்கி உள்ளதாக அறிவித்து உள்ளது.

மத்தியஅரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளன. வடகிழக்கு மாநிலங்கள் உள்பட டெல்லியில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

இதன் காரணமாக பல மாநிலங்களில் இணையதள சேவை, மொபைல் சேவைகள் முடக்கப்பட்டு வரும்  நிலையில், இன்று டெல்லியிலும் மொபைல் சேவை நிறுத்தப்பட்டு உள்ளது. மேலும் பல பகுதிகளிலும் இணையதள சேவையும் நிறுத்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து அறிவித்துள்ள ஏர்டெல் நிறுவனம்,  அரசாங்கத்தின் உத்தரவைத் தொடர்ந்து , டெல்லியின் பல பகுதிகளில் குரல் மற்றும் இணையம் உள்ளிட்ட மொபைல் சேவைகளை நிறுத்தி இருப்பதாக கூறி உள்ளது.

தலைநகரில் அதிகரித்து வரும் போராட்டங்களை அடுத்து மத்தியஅரசு அறிவுறுத்திய நிலையில், தங்களது சேவைகளை சில பகுதிகளில் முடக்கி உள்ளதாக தெரிவித்து உள்ளது. மத்திய அரசிடம் இருந்து மீண்டும் தகவல் வந்தவுடன், இடைநீக்க உத்தரவுகள் நீக்கப்பட்டு, சேவைகள் முழுமை யாக இயங்கும்,” என்று ஏர்டெல் வாடிக்கையாளர் பராமரிப்பு நிர்வாகி தெரிவித்து உள்ளார்.‘