குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தால் சாலைகள் ஸ்தம்பிப்பு! பொதுமக்கள் அவதி

--

டெல்லி:

த்தியஅரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில், சாலைகள் அனைத்தும் முடங்கியது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாயினர்.

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக டெல்லியில் மாணவர்களின் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. இன்று மாபெரும் பேரணி போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், போராட்டங்களை தடுப்பதற்காக விதிக்கப்பட்ட சாலைக் கட்டுப்பாடுகளால் டெல்லியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

டெல்லி-குர்கான் சாலை உள்பட பல சாலைகளில் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், பல்வேறு இடங்களில் பேரிகார்டுகள் வைக்கப்பட்டு, சோதனைக்குப் பிறகே வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு,சாலையில் வாகனங்கள் தேங்கின. டெல்லி-குர்கான் எல்லைப் பகுதி போக்குவரத்து நெரிசலால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

டெல்லியில் பல மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள்  வெளியே செல்ல முடியாமலும், அலுவலகங்களுக்கு செல்ல முடியாமலும் கடும் அவதியடைந்தனர்.

விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த விமான பணியாளர்கள் குழு, குர்கான் ஆம்பியன்ஸ் மால் அருகே  சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசலில் சிக்சி தவித்ததாக  விஸ்தாரா விமான நிறுவனம் தெரிவித்து உள்ளது.

இந்த வாகன நெரிசல் காரணமாக,  விமானங்களை தவறவிட்டவர்களுக்கு அடுத்தடுத்த விமானங்களில் இடம் அளிக்கப்படும் எனவும்  குறிப்பிட்டுள்ளது.

டெல்லி சாலையில், வாகனங்கள் நகராமல் அப்படியே நிற்பதை சிலர் புகைப்படங்களாகவும் வெளியிட்டுள்ளனர். இதனிடையே, டெல்லி போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், வாகனங்கள் சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுவதால் போக்குவரத்தின் வேகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.