குடியுரிமை திருத்த சட்டம் எதிர்த்து தீர்மானம்! நாளை கேரள சட்டமன்ற சிறப்பு கூட்டம்!

திருவனந்தபுரம்:

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், கேரள சட்டமன்ற சிறப்பு கூட்டம் நாளை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில், குடியுரிமை திருத்த சட்டம் எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுசிறது.

மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்தியுள்ள  குடியுரிமை திருதத சட்டத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.  இந்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி  அரசியல் கட்சிகள் மட்டுமின்றி மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இந்த சட்டத்தை தங்களது மாநிலங்களில் அமல்படுத்த மாட்டோம் என்று காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்கள் உள்பட மேற்குவங்கம், மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திரம் மற்றும் கேரள மாநிலங்களும் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

இந்த நிலையில், கேரளாவில் ஆளும்கட்சியான உள்ள கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கடந்த வாரம் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் மாநில முதல்வர் பினராயி விஜயன்  கலந்துகொண்டார்.

இந்த நிலையில், அடுத்தகட்ட போராட்டம் குறித்து முதல்வர் தலைமையில்  அனைத்து கட்சி ஆலோசனைக்  கூட்டம் நடத்தப்பட்டது. இதில் எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா மற்றும் முஸ்லிம்லீக், இந்திய கம்யூனிஸ்டு உள்பட அனைத்து கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்தவும்,  கேரள சிறப்பு சட்டசபை கூட்டத்தை கூட்டி குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றவும் முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி,  கேரள சட்டசபையின் சிறப்பு கூட்டம் நாளை (31-ந்தேதி) கூட்டப்படுகிறது. இந்த கூட்டத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. அதைத்தொடர்ந்து, கேரளாவைச் சேர்ந்த அனைத்து கட்சி தலைவர்களும் டெல்லி சென்று ஜனாதிபதியை சந்தித்து இந்த கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.