குடியுரிமை சட்ட எதிர்ப்பு : ஒரே குடையின் கீழ் ஒருங்கிணையும் 100 அமைப்புகள்

டில்லி

குடியுரிமை சட்ட எதிர்ப்பு குறித்துப் போராட நாடெங்கும் உள்ள 100 அமைப்புகள் நாம் இந்திய மக்கள் என்னும் பெயரில் ஒன்று சேர்ந்துள்ளன.

குடியுரிமை சட்டத்துக்கு நாடெங்கும் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.  அத்துடன் மத்திய அரசு அறிவித்த தேசிய குடிமக்கள் பதிவேடு, மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றையும் அமல்படுத்தப் பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  இந்த போராட்டங்களில் பல அமைப்பினர் பங்கேற்று தனித்தனியாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்

சுவராஜ் அபிமான் கட்சியின் நிறுவனர் யோகேந்திர யாதவ் இந்த போராட்டங்களை ஒருங்கிணைந்து நடத்த முடிவு செய்தார்.  அதையொட்டி இவர் மேதா பட்கர், ஹர்ஷ் மந்தர், தீஸ்தா செடல்வாத், மிகிர் தேசாய் ஆகியோருடன் இணைந்து 100 அமைப்புக்களை ஒன்றிணைத்துள்ளார்.   இந்த ஒருங்கிணைப்பு அமைப்புக்கு நாம் இந்திய மக்கள் எனப் பெயர் சூட்டி உள்ளார்.

இது குறித்து யோகேந்திர யாதவ், “நாட்டில் குடியுரிமை சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை எதிர்த்துப் போராடும் மக்கள் அனைவரும் “நாம் இந்திய மக்கள்” என்னும் ஒருங்கிணைந்த அமைப்பின் கீழ் போராட்டங்களை நடத்துங்கள். இது நமது அரசியலமைப்பு சட்டத்துக்கான ஆதரவைப் பெருமளவில் அரசிடம் கொண்டு போய் சேர்க்கும்.

இந்த அமைப்பின் கீழ் 100 அமைப்புக்கள் ஒருங்கிணைந்துள்ளன.  நாம் இந்திய மக்கள் அமைப்பு வரும் ஜனவரி மாதம் 8, 12 14, 15 மற்றும் 17 ஆம் தேதிகளில் ஒருங்கிணைந்து போராட்டங்கள் நடத்த உள்ளது.  அத்துடன் ஜனவரி 26 அன்று நள்ளிரவில் கொடி ஏற்றிக் கொண்டாட உள்ளோம்.  மகாத்மா காந்தியின் நினைவு தினமான ஜனவரி 30 அன்று ஒரு மனிதச் சங்கிலி போராட்டத்தை நடத்த உள்ளோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் மூலம் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்த மத்திய அரசு முற்பட்டு வருவதாக இந்த அமைப்பின் மற்ற தலைவர்களான ஹர்ஷ் மந்தர், தீஸ்தா செடல்வாத் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.  இந்த விவகாரத்தில் மக்கள் மத வித்தியாசம்  பாராமல் போராட வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.  மேலும் தற்போது எந்த வித வித்தியாசத்தையும் பார்க்கும் நிலையில் நாடு இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

கார்ட்டூன் கேலரி