வுகாத்தி

குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் ஒரு பகுதியாக அசாம் மாநிலத்தில் 800 கிமீ பாத யாத்திரைக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.

குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.   பல மாநிலங்களில் போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளன.   இதையொட்டி பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.   இந்த போராட்டம் வட இந்திய மற்றும் வட கிழக்கு இந்திய மாநிலங்களில் மிகவும் தீவிரம் அடைந்துள்ளது.   அதில் அசாம் மாநிலமும் ஒன்றாகும்.

அசாம் மாநில மாணவர் சங்கம் இந்த போராட்டங்களை முன்னின்று நடத்தி வருகிறது.  இந்த போராட்டத்துக்குப் பல திரையுலக பிரபலங்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், மற்றும் பொதுமக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்.   இந்த போராட்டத்தில் சாம் ஸ்டஃபோர்ட் என்னும் இளைஞர் பாதுகாப்புப் படையினர் சுட்டதில் மரணம் அடைந்துள்ளார்.   அவரது இறுதிச் சடங்கு நேற்று நடந்தது.

இதில் அசாம் மாணவர் சங்கத்தினர், எதிர்க்கட்சியினர், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர்.   இந்த நிகழ்வின் போது அசாம் மாநில காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ரிபுன் போரா உரையாற்றினார்.  அவர் தனது உரையில், “நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே இந்த சட்டத்தை அசாம் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் எனத் தெரிவித்து வருகிறோம்.  இந்த சட்டம் இங்குள்ள மக்களுக்கு எதிரானது.

மக்களுக்கு எதிரான எந்த சட்டத்தையும் காங்கிரஸ் எதிர்த்துப் போராடும்.   இந்த சட்டத்துக்கு எங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் சதியா நகரில் இருந்து துபுரி நகரம் வரை 800 கிமீ பாத யாத்திரை நடத்த உளது.  இதில் அனைவரும் கலந்துக் கொள்ள வேண்டும்” என அழைப்பு விடுத்துள்ளார்.

அசாமின் கிழக்குப் பகுதியில் சதியா என்னும் நகரம் அமைந்துள்ளது.  துபுரி என்பது மேற்கு எல்லையில் உள்ள நகரம் ஆகும்.  துபுரி நகரம் இந்திய வங்கதேச எல்லையில் உள்ளது.