கொல்கத்தா

நேற்று கொல்கத்தாவில்  நடந்த  கால்பந்துப் போட்டியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு குறித்த கேலிச் சித்திரங்கள் வைக்கப்பட்டிருந்தன.

மக்கள் மத்தியில் குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு  ஆகியவற்றுக்கு கடும் எதிர்ப்பு உள்ளது.   எதிர்க்கட்சிகள் இந்த இரண்டையும் எதிர்த்து நாட்டின் பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.   குறிப்பாக மேற்கு வங்க மாநிலத்தில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது.   அந்த போராட்டம் கொல்கத்தா நகரில் நடைபெறும் கால்பந்துப் போட்டியிலும் எதிரொலித்துள்ளது.

நேற்று கொல்கத்தா நகரில் மோகன் பகன் மற்றும் கிழக்கு வங்க அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி நடந்தது.   இந்த போட்டியில் கிழக்கு வங்க அணியின் ரசிகர்கள் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான கேலிச் சித்திரங்கள் மற்றும் வாசகங்கள் அடங்கிய பல பதாகைகளை காட்சிக்கு வைத்திருந்தனர்.    இந்த பதாகைகளை கடந்த 20 நாட்களாகக் கிழக்கு வங்க அணியின் 30 ரசிகர்கள்  உருவாக்கி உள்ளனர்.

அந்த அணியின் ரசிகர்களில் ஒருவர், “கிழக்கு வங்க அணியின் ரசிகர்களான எங்களில் பலர் வங்க தேசத்தில் இருந்து இங்கு குடியேறியவர்கள் ஆவாரக்ள்.   கடந்த 1947 ஆம் வருடம் நடந்த பிரிவினையின் போது நாங்கள் வலுக்கட்டாயமாக இங்கு அனுப்பப்பட்டோம்.   தற்போது நாங்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பதை நிரூபிக்க  ஆவணங்கள் கேட்கின்றனர்.

அத்துடன்  எங்களை வங்க தேசத்தவர் என பலரும் சமூக வலைத் தளங்களில் இருந்து வெளியேற்றி வருகின்றனர்.   இந்த பதாகைகள் மூலம் நாங்கள் யார் என்பதையும் எங்களுக்கு இந்த நாட்டின் மீதான உரிமை மற்றும் அன்பையும் வெளிப்படுத்தி உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு விளையாட்டுப் போட்டிகளின் போது எதிர்ப்பு தெரிவிப்பது  புதியது அல்ல.   ஏற்கனவே மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையே நடந்த முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் போது ஒருசிலர் தங்கள் சட்டையில், “நோ என் ஆர் சி,   நோ என் பி ஆர், நோ சி ஏ ஏ” என அச்சடித்து அணிந்து வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.