சிஏஏ போராட்டம்: நேற்றைய கைது உத்தரவை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை:

னுமதியின்றி நடத்தப்படும் போராட்டங்களை தடுக்க வேண்டும் என்றும், அவர்களை கைது செய்ய வேண்டும் என்று டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. தற்போது, அந்த உத்தரவை நிறுத்தி வைக்க நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்தின் பல இடங்களில் சிஏஏக்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது மட்டுமின்றி அந்த பகுதியில் வணிகம் பாதிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

அதேவேளையில் சிஏஎக்கு ஆதரவாக சில அமைப்புகள் எதிர் போராட்டம் நடத்துகின்றனர். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் சூழல் உருவாகி வருகிறது.

இதுதொடர்பாக திருப்பூரைச் சேர்ந்தவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற  நீதிபதிகள், அனுமதியின்றி போராடுபவர்களை கைது செய்யும்படி டிஜிபிக்கு உத்தரவு பிறப்பித்தனர்.

இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, கைது உத்தரவை திரும்ப பெற வேண்டும் வழக்கறிஞர்கள் இன்று உயர்நீதிமன்றத்தில் முறையிட்டனர்.  அமைதியாக போராடி வரும் தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க கூடாது என்றும் கேட்டுகொண்டனர்.

இதையடுத்து, போராட்டக்காரர்களை கைது செய்வது தொடர்பாக பிறப்பித்த உத்தரவு நிறுத்தி வைக்கப்படுவதாக நீதிபதிகள் அறிவித்தனர். இந்த வழக்கு தொடர்பாக அனைத்து தரப்பு வாதங்களும் 11-ம் தேதி கேட்கப்படும் என்றும் தெரிவித்து, வழக்கை ஒத்திவைத்தனர்.

நேற்று நடைபெற்ற வழக்கு விவரம்…

https://www.patrikai.com/caa-protest-without-permission-chennai-court-order-for-dgp/