ண்ணூர்

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்த கேரள மாநில ஆளுநருக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

மத்திய பாஜக அரசு குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவைத் தாக்கல் செய்ததில் இருந்தே நாடெங்கும் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.  தற்போது அந்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று சட்டமாக உள்ளது.    இதை எதிர்த்து கடும் போராட்டம் நடைபெற்று வருகிறது.  காங்கிரஸ், கம்யூனிஸ்ட்,  திமுக, திருணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

நமது அண்டை மாநிலமான கேரளாவிலும் தினம் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் அம்மாநில ஆளுநர் முகமது கான் இந்த சட்டத்தை ஆதரித்து கருத்து தெரிவித்து வருகிறார்.    இது போராட்டக்காரர்களுக்கு கடும் அதிருப்தியை அளித்து வருகிறது.  நேற்று கண்ணூர் பல்கலைக்கழகத்தில் நடந்த 80ஆவது தேசிய வரலாற்று மாநாட்டில் ஆளுநர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டை தொடங்கி வைத்த ஆளுநர் முகமது கான் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாக உரையாற்றினார்.     கூட்டத்துக்கு வந்திருந்த சிலர் அவரை எதிர்த்து கோஷமிட்டனர்.  அத்துடன் அவருக்கு எதிரான  பதாகைகளை காட்டி குரல் எழுப்பினார்கள். இதையொட்டி அங்கு கடும் பரபரப்பு ஏற்பட்டது.  காவல்துறையினர் அவர்களைக் கைது செய்ய முயன்றனர்.

அதற்கு அந்த மாநாட்டில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேஷ் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்ததால்  அந்த முயற்சி கைவிடப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து ஆளுநர், “நான் இந்த சட்டம் குறித்து தேவையற்ற தகவல்கள் கூற விரும்பவில்லை.   ஆயினும் மாநாட்டில் கலந்துக் கொண்டவர்களில் சிலர் சகிப்புத் தன்மை இன்று நடந்துக் கொண்டனர்.  இது குறித்து விளக்கம் அளிக்க அந்த பல்கலைக்கழக துணைவேந்தருக்கு உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.