புதுச்சேரி:

நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் தீவிரம் அடைந்து வரும் நிலையில், இன்று புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவை மாணவர்கள் புறக்கணிப்பதாக அறிவித்து உள்ளனர்.

புதுச்சேரியில் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சென்னை வந்தார். பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடு வந்துள்ளார். அவர்களை தமிழக கவர்னர் பன்வாரிலால், முதல்வர் எடப்பாடி, துணைமுதல்வர் ஓபிஎஸ் உள்பட அமைச்சர்கள் அதிகாரிகள் விமான நிலையத்துக்கு சென்று வரவேற்றனர்.

இன்று  புதுவைப்பல்கலைகழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்ற உள்ளார்.

ஆனால், குடியுரிமைச் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து  பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்க உள்ளதாக பல்கலைக்கழக மாணவர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக அறிக்கையையும் மாணவர் சங்கம் வெளியிட்டு உள்ளது.

சென்னை வந்துள்ள குடியிரசுத் தலைவர் இங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி செல்கிறார். அங்கு புதுச்சேரி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பின், அவர் அரவிந்தர் ஆசிரமம் செல்கிறார். அங்கிருந்து காரைக்கால் சனிபகவான் கோயிலுக்கு சென்று வழிபாடு முடித்து சென்னை திரும்புவார்.

நாளை கன்னியாகுமரியில் நடக்கும் நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார். குடியரசுத் தலைவரின் வருகையை முன்னிட்டு, சென்னை, புதுச்சேரி மற்றும் கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.