குடியுரிமை சட்டம் மக்களை மதரீதியில் பிளவுபடுத்தவே திருத்தப்பட்டுள்ளது : கார்த்தி சிதம்பரம்

--

காரைக்குடி

குடியுரிமை சட்டம் மக்களை மதரீதியாகப் பிளவு படுத்த திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகச் சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.  எதிர்க்கட்சிகள் தொடர்ந்து இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த போதிலும் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.   இதற்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

நேற்று சிவகங்கை மக்களவை உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகருமான கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவர், ”ஆட்சியாளர்கள் சிறுபான்மையினரை இரண்டாம் தரக் குடிமக்களாக மாற்றுவதற்காகக் குடியுரிமை சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளனர்.

சர்வாதிகாரி ஹிட்லரின் சட்டத்திற்கு இணையாக இந்த சட்டத் திருத்தம் உள்ளது.

இச்சட்டத்தைத் திருத்துவதற்கான முக்கியக் காரணம் மக்களை மத ரீதியில் பிரிக்க வேண்டும் என்பதே ஆகும். ஜெயலலிதா இருந்திருந்தால் இந்தச் சட்டத் திருத்தத்தை அவர்  நிச்சயமாக எதிர்த்திருப்பார்.

பணம் வாங்கிக்கொண்டு வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிப்பது ஜனநாயகத்தின் கேலிக்கூத்தாகும். இதை வன்மையாகக் கண்டிக்க வேண்டும்.  விரைவில் தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும்” எனக் கூறினார்.