குடியுரிமை சட்டத்திருத்த மசோதா : மற்ற காங்கிரஸ் முதல்வர்களைப் பின்பற்ற உள்ள கமல்நாத்

டில்லி

குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா குறித்து மற்ற காங்கிரஸ் முதல்வர்கள் எடுக்கும் நடவடிக்கைகளைப் பின்பற்றுவதாக ம பி முதல்வர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவை மற்றும் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத்திருத்த மசோதா ஜனாதிபதியால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.   இந்த மசோதா விரைவில் சட்டமாக உள்ளது.  இதற்குப் பல எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.  பஞ்சாப், கேரளா, மேற்கு வங்கம் போன்ற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள் இந்த மசோதாவை அமலாக்கம் செய்யப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மத்தியப் பிரதேச மாநில முதல்வருமான கமல்நாத் தன்னை சந்தித்த பெண் பத்திரிகையாளர்களிடம், “தற்போது நாடு உள்ள நிலையில் பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறோம்.   அதற்குத் தீர்வு காண வேண்டிய மத்திய அரசு அதைச் செய்யாமல் உள்ளது.

ஆனால் இந்த பிரச்சினைகளில் இருந்து மக்களைத் திசை திருப்பும் பணிகளைச் செய்து வருகிறது.   அதில் ஒன்று குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா ஆகும்.  இது மத்திய அரசின் கவனம் திருப்பும் அரசியல் நடவடிக்கை ஆகும்.    இவ்வாறு நடந்துக் கொள்ளும் பாஜக அரசுக்கு அனைத்து எதிர்ககட்சிகளும் இணைந்து பதிலடி தர வேண்டும்.

தற்போது நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் இணைந்து ஒரு பொதுவான திட்டம் மற்றும் ஒற்றுமையுடன் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.   இது  போல மசோதா கொண்டு வரும் முன்பு மத்திய பாஜக அரசு எந்த ஒரு மாநில அரசின் கருத்துக்களையும் கேட்கவில்லை.

 

மத்டியப் பிரதேச மாநிலத்தைப் பொறுத்தவரைக் காங்கிரஸ் ஆட்சி செய்யும் மற்ற மாநில அரசுகள் எடுக்கும் முடிவை நாங்கள் பின்பற்ற உள்ளோம்.   இது போன்ற ஒருதலையான சட்டத் திருத்தங்களைக் காங்கிரஸ் கட்சி எப்போதும் ஒப்புக் கொள்ளாது” எனத் தெரிவித்துள்ளார்.