குடியுரிமை சட்டத்திருத்த மசோதா எதிர்ப்பு : பாஜகவில் இருந்து விலகிய சூப்பர் ஸ்டார்

வுகாத்தி

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து அசாம் மாநில சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் ஜதின் போரா பாஜகவில் இருந்து விலகி உள்ளார்.

இன்று ஜனாதிபதி ஒப்புதல் அளித்த குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு உள்ளது.   குறிப்பாக அந்த மாநிலங்களில் வசிக்கும் பழங்குடியினர் இதனால் தங்கள் பெரும்பான்மை மற்றும் பாரம்பரியம் பாதிப்பு அடையும் என நம்புகின்றனர்.  அசாம் மாநிலத்தில் இந்த மசோதாவை எதிர்த்து நடைபெறும் போராட்டங்களில் கடும் வன்முறை வெடித்துள்ளது.

அசாம் மாநிலத்தில் பாலிவுட் பாடகர் மற்றும் அசாம் மாணவர் சங்கத்தினர் இந்த குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.  அசாம் மக்கள் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.   இந்த போராட்டத்தில் மேலும் பல திரைப்படத் துறையினரும் களமிறங்கி உள்ளனர்.

அசாம் மாநில சூப்பர் ஸ்டார் எனப் புகழப்படும் ஜதின் போரா பாஜகவில் உள்ளார். இவர் மாநில திரைப்பட நிதி மேம்பாட்டு வாரியத்தில் தலைவர் பதவி வகித்து வருகிறார்.   அசாமில் நடந்த போராட்டத்தில் கலந்துக் கொண்ட இவர் மசோதாவை எதிர்த்து பாஜகவில் இருந்து விலகி உள்ளதாக அறிவித்துள்ளார்.   அத்துடன் வாரியத் தலைவர் பதவியில் இருந்தும் ராஜினாமா செய்துள்ளார்.

இது குறித்து போரா, “நான் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை ஏற்றுக் கொள்ளவில்லை.   மாறாகக் கடுமையாக எதிர்க்கிறேன்.  எனது ஜதின் போரா என்னும் அடையாளம் எனக்கு அசாம் மக்கள் அளித்தது.   நான் இந்த விவகாரத்தில் அவர்களுக்கு ஆதரவாக இருக்கவே விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.