மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவிகிதம் வரை அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக ஆண்டுக்கு ரூ.6,000 கோடி கூடுதலாக செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

7th-pay-commission

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்துவது தொடர்பான மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று டெல்லியில் நடந்தது. இதில், மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவிகிதம் வரை அகவிலைப்படி உயர்த்த முடிவு எடுக்கப்பட்டது. ஏற்கனவே மத்திய அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி கிடைத்து வந்த நிலையில் தற்போது கூடுதலாக 2% வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் ஒன்றாம் தேதி முதல் கணக்கிட்டு இந்த தொகை வழங்கப்பட இருக்கிறது.

இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 6,112.20 கோடியும், நடப்பாண்டில் கடந்த ஜூன் மாதம் முதல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரையிலான நிதியாண்டில் ரூ. 4,074.80 கோடியும் கூடுதலாக செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் 48.41 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், ஓய்வூதியதாரர்கள் 62.03 லட்சம் பேரும் பயன் பெறுவார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.