புதுடெல்லி: குறிப்பிட்ட 14 துறைகளில் திறன்பெற்ற இந்தியப் பணியாளர்களை ஜப்பானுக்கு அனுப்பிவைக்கும் ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது; இந்தியா – ஜப்பான் இடையே திறன்பெற்ற பணியாளர்களை அனுப்புவதற்கும், ஏற்றுக்கொள்வதற்கும் ஒரு வழிமுறை உருவாக்கப்படும். நர்சிங், மின்சாரம், மின்னணு தகவல் தொடர்பு தொழில், கப்பல் கட்டுதல், வாகன பராமரிப்பு, விமான போக்குவரத்து, வேளாண்மை, மீன்வளம் உள்ளிட்ட 14 துறைகளில் பணியாற்றுவதற்கு தேவையான திறமை மற்றும் ஜப்பானிய மொழி சோதனைக்கு தகுதிபெற்ற பணியாளர்கள் அனுப்பப்படுவார்கள்.

இந்திய பணியாளர்களுக்கு ஜப்பான் நாட்டின் சார்பாக ‘குறிப்பிட்ட திறன் பணியாளர்கள்’ என்ற பெயரில் புது விசா வழங்கப்படும். புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் இதனை நடைமுறைப்படுத்த கூட்டு செயற்குழு அமைக்கப்படும். இந்த ஒப்பந்தம் திறமையான தொழில் வல்லுநர்களை இந்தியாவிலிருந்து ஜப்பான் செல்வதற்கு ஊக்கப்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.

இதேபோல், கடந்த 2017ம் ஆண்டில் ஜப்பான் தொழில்துறைக்காக இந்தியாவும், ஜப்பானும் இணைந்து தொழில்நுட்ப பயிற்சி திட்டத்தை நடத்தின என்பது குறிப்பிடத்தக்கது.